தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது.
தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் ஏற்பாடு செய்து வரவேற்றார்.
இதில் தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏவும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்.ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், தஞ்சை தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான அருளானந்தசாமி, வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், சமுதாய சுகாதார செவிலியர் ரேணுகா, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் ரத்ததானம் செய்தவர்களிடம் இருந்து தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவ அலுவலர் காயத்ரி மற்றும் செவிலியர்கள் ரத்தத்தை சேகரித்தனர். இம்முகாமில் 70 பேர் ரத்ததானம் செய்தனர். வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய பல் டாக்டர் அபிராமி நன்றி கூறினார்.
முகாம் குறித்து வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் கூறுகையில், “இந்த முகாமில் தன்னார்வலர்கள் அளித்த ரத்தம் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரசவத்திற்காக வரும் தாய்மார்களுக்கும், குழந்தையை பிரசவித்த தாய்மார்களுக்கும் அவசர அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பிற்கு ஈடு செய்யவும், அனீமியா என்ற ரத்த சோகைக்கு கர்ப்ப காலத்தில் சிகிச்சை அளிக்கவும் உரிய நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்கள் நலன் கருதி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தகுதி உள்ள தன்னார்வலர்கள் ரத்ததானம் அளிக்க முன் வர வேண்டும். சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. எனினும் 300 முதல் 350 மில்லி லிட்டர் (ஒரு யுனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகி விடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களால் ரத்த தானம் செய்ய முடியும்.
ரத்தம் வழங்குவதால் மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்த தானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும், தானம் செய்யும் போது சீரடைகிறது” என்றார்.