தஞ்சாவூர்: தித்திக்கும் தேன் தரும் திறமை வாய்ந்த தேனீக்களின் விசித்திரமான வாழ்க்கை. வாட்ஸ்ஆப் ஐ முந்தும் வகையில் தகவல் பரிமாற்றம், அயல் மகரந்த சேர்க்கைக்கு அயராது உழைக்கின்றன தேனீக்கள்.

தேனீ உலகின் சுவாரஸ்யமான, நுணுக்கமான, ஆச்சர்யமான உயிரினம். அயல் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணமாக இருக்கும் தேனீக்கள் தான் உலகின் 80 சதவிகித உணவு பொருள்களின் உற்பத்திக்கு காரணமாக உள்ளது. எனவே அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்போம், உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும், தெவிட்டாத தேனை தரும் தேனீக்களுக்கு வாழ்வளிப்போம் என்று தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.

உலகத்தில் ஐந்து வகையான தேனீக்கள் உள்ளது. அவை இந்திய தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத தேனீ, கொம்பு தேனீ, மலைத்தேனீ ஆகியவை. இதில் மனிதர்களால் வளர்க்கக் கூடியது இந்திய தேனீ, இத்தாலிய தேனீ மற்றும் கொடுக்கில்லாத தேனீ ஆகியவை ஆகும்.



Honey Bees Pollination: தித்திக்கும் தேன் தரும் திறமை வாய்ந்த தேனீக்கள்... அயல் மகரந்த சேர்க்கைக்கு அயராது உழைப்பவை


ஒரு தேனி குடும்பத்தில் ஒரு ராணி தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் பல்லாயிரம் வேலைக்கார பெண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாட்களும், வேலைக்கார தேனீக்கள் 70 நாட்களும், ராணி தேனீக்களுக்கு 2 வருடங்களும் ஆயுள் காலமாகும். ராணி தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கள், ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செய்வது தேன் கூட்டை பாதுகாப்பதும் கடமையாகும்.

மற்ற எல்லா வேலைகளையும் வேலைக்கார தேனீக்ள் செய்யும். உணவு சேகரிப்பது, தேன் கூடு கட்டுவது, தேனை பக்குவப்படுத்துவது, கூட்டை சுத்தமாக பராமரிப்பது வேலைக்கார பெண் தேனீக்களாகும். ஆனால் இவை முட்டையிடாது.  தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்தில் கட்டும். இதன் மூலம் இடந்தை வீணாக்காமல் முழுசாக பயன்படுத்த முடியும். ஆண் தேனீக்களுக்கு பெரிய அருங்கோண செல், வேலைக்கார தேனீக்களுக்கு சிறிய அருங்கோண செல் வடிவத்தில் கூடுகட்டிய பின், ராணி தேனீக்களுக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் சரியாக இருந்தால் மட்டுமே ராணி தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம் இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே, சாப்பிடும். தேனை சேகரிப்பதற்கான காரணம், குளிர் காலங்களில் பூ பூக்காத காலங்களில் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க மட்டுமே.

தேனீக்கள் தேன் சேகரித்து பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பமாகும். தேன் தேடிச் செல்லும் வேலைக்கார தேனீக்கள் பூக்களின் மகரந்தத்தை உறிஞ்சி தன் உடலில் இருக்கும் தேன் பையில் சேகரித்துக் கொள்ளும் அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல் தேனீயின் வயிற்றில் இருக்கும் கொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்கு திரும்பி வரும் தேனீக்கள் கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்த திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான் ஒரு துளி தேன் சேரும். கூட்டை பராமரிக்கும் தேனீக்கள், அந்த திரவத்தை கூட்டின் ஓரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி அதின் இஸ்வர்டோஸ் எனும் நொதியை சேர்க்கும். பிறகு அந்த திரவத்தில் இருந்து நீர் தன்மை வற்றிபோவதற்காக தன் இறகை ஆட்டி, ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனை பாதுகாக்க ஒரு வகை மெழுகை பூசி வைக்கும். இத்தனை நடைமுறைகளுக்கு பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனீக்களுக்காக கூட்டில் விட்டுதான். எடுப்பார்கள். இந்த வேலை நடக்கும்போது ராணி தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனபெருக்க காலத்தில் மட்டுமே ராணீ தேனீக்களுக்கு வேலை. அந்த சமயத்தில் ராணித் தேனீ உயரத்தில் பறந்து, எந்த ஆண் தேனீ தன்னை துரத்தி பிடிக்கிறதோ அதோடு மட்டுமே சேரும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஆண் தேனீ இறந்து விடும். இதன் பிறகு ராணி தேனீ முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் தேனீக்களை வேலைக்கார தேனீதான் வளர்ப்பு தாயாக வளர்க்கும்.

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்து கொள்ளும் முறை தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விட துல்லியமானது. யானை, ஆமைகளை விட கூர்மையான ஞாபக சக்தி உடையது தேனீக்கள். உணவு தேவைப்படும் போது 'ஸ்கவுட்' ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டு கூட்டுக்கு திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டு பிறந்த தோட்டத்தை நடனமாடி எந்த திசையில் எத்தனை தூரத்தில் உள்ளது என்பதை துல்லியமாக தெரிவிக்கும். இந்த நுட்பமான நடன ரக்சியத்தை கண்டுபிடித்த ஆஸ்திரிய விஞ்ஞானி ஸ்காலர் கார்ல்வான் ஃபிரிஸ்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ ஆகியவையும், அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆசிட், சிட்ரிக் அமிலம் போன்ற சத்துகள் உள்ளது. இதயத்தை பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. தேன் இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, கல்லீரல் செயல்பாட்டை தூண்டுகிறது.

பல்வேறு நன்மைகளை தரும் தேன் உற்பத்தி செய்யும் தேனீக்களை வளர்ப்பதுடன், அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்கும், அழிந்துவரும் இனமான தேனீக்களை பாதுகாப்பது விவசாயிகளின் கைகளில் மட்டுமே உள்ளது. எனவே பயிர்களில் பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்த்து நன்மை செய்யும் தேனீயை வளர்ப்போம்.