தஞ்சாவூர்: வயலுக்கு இயற்கை உரமாகவும், கால்நடைகளுக்கு புரதச்சத்தும் கொடுக்கக்கூடிய அசோலா அனைத்து இடங்களிலும் ஆர்வமுடன் வளர்க்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா தெரிவித்துள்ளதாவது:
அசோலா என்பது பெரணி இனத்தை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். இத்தாவரம் மிகமிக சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களையும் கொண்டது. தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரினுள் மூழ்கியபடி மிதக்கும். இது நெல் சாகுபடி வயல்களிலும், நீர் நிலைகளிலும், சின்ன குட்டை மற்றும் நீர் தேங்கியுள்ள வாய்க்கால்களிலும் வளரக்கூடியது. நெல் வயல்களில் இயற்கை உரமாக பயன்பட்டு தழைச்சத்தினை கொடுப்பதுடன் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
விதையில்லா இனப்பெருக்கம் மற்றும் விதை இனப்பெருக்கம் மூலம் பெருக்கம் அடையக்கூடியது. அசோலா 25- 30 டிகிரி செல்சியஸ் வெப்ப சூழ்நிலையில் நன்கு வளர்ச்சி அடைந்து பெருக்கமடையும். வெப்பநிலை அதிகரிக்கும் போது அசோலா வளர்ச்சி தடைப்பட்டு உற்பத்தி குறையும். இதனை நெல் வயல்களில் ஒரு முறை பயன்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இது தானாகவே உற்பத்தியாகும் திறன் கொண்டது.
அசோலா வகைகள்
அசோலா ஹலோடிகா
அசோலா ஜப்பானிக்கா
அசோலா மைக்ரோபில்லா
அசோலா பின்லேட்டா
அசோலா ரூபரா
அசோலாவில் உள்ள சத்துக்கள்
அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.
நெல் வயல்களில் அதிக அளவில் தழைச்சத்து மற்றும் அங்கக சத்துக்களை கொடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட அசோலா தற்சமயம் கால்நடைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அசோலா நன்கு செரிக்கும் தன்மை கொண்டதால் கால்நடைகளுக்கு அதிக அளவில் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. அசோலாவை தனியாகவும், அடர் தீவனத்துடனும் கலந்து கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள், வாத்துகளுக்கு கொடுக்கலாம்.
ஒரு ஏக்கர் நெல் வயல்களுக்கு 200 கிலோ அசோலாவினை நட்ட 20 தினங்களில் போட்டால், 15 தினங்களில் 2000 கிலோவாக வளர்ந்த உடன் களை எடுக்கும் போது மிதித்து விடுவதன் மூலம் நல்ல அங்கக உரமாக நெல் வயல்களுக்கு கிடைக்கிறது. சம்பா மற்றும் தாளடி பருவங்களில் குளிர் காலங்களில் இதன் வளர்ச்சி பல மடங்காக பெருகும்.
தீவனத்திற்காக அசோலா உற்பத்தி செய்தல்
நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 5 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்க வேண்டும். இந்த பாத்தியில் புல் பூண்டுகள் வளர்வதை தடுக்கும் உரச்சாக்கினை குழியில் பரப்பி பின் செங்கல்லை குறுக்குவாட்டில் குழியை சுற்றி வைக்க வேண்டும். அதன் மேல் சில்பா சீட்டை ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு மண் இட்டு சமன் செய்ய வேண்டும். பின் 5 கிலோ மாட்டு சாணத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்திகளில் ஊற்ற வேண்டும். பின்னர் இதனுடன் 100 கிராம் சூப்பர் பாஸ்போர்ட் உரத்தை சேர்க்க வேண்டும். பாத்தியில் மண் மற்றும் தண்ணீரை நன்றாக கலக்கி விட வேண்டும். பிறகு ஒரு கிலோ அசோலாவினை குழியில் இடவேண்டும்.
தினமும் காலை அல்லது மாலை பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரில் கரைந்து அசோலா வளர உதவுகிறது. 15 நாட்களில் 20 முதல் 25 கிலோ அசோலா உற்பத்தி ஆகிவிடும் இவற்றில் மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு மீதமுள்ள இரண்டு பங்கை அறுவடை செய்து உபயோகப்படுத்தலாம். அசோலா ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் மூன்று டன் புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் உடையது. அசோலாவிற்கு 30 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு கிலோ பசுஞ்சாணம் கரைக்க வேண்டும். பூச்சி தாக்குதல் தென்பட்டால் 5 மி.லிட்டர் வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்க வேண்டும்.
சூரிய ஒளி நேரடியாக அசோலா பாத்தின் மீது விழாதவாறு மர நிழலில் வளர்க்க வேண்டும் அதிக அளவு சூரிய ஒளி பட்டால் அசோலா பழுப்பு நிறமாக மாறிவிடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாத்தியை சுத்தம் செய்து இடுப் பொருட்களை மாற்ற வேண்டும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி செலவில் 60% தீவனத்திற்கு செலவிட வேண்டி உள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்து பால் உற்பத்தியை பெருக்க கறவை மாடுகளுக்கு அசோலா தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாதது. எனவே குறைந்த செலவில் நிறைந்த லாபம் பெற வீட்டுக்கு வீடு விவசாயிகள் அசோலா வளர்க்க வேண்டும்.