நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று திருவாரூரில் சசிகலா பேட்டியளித்தார்.
திருவாரூர் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தியின் மகள் பூஜாஸ்ரீக்கும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகன் கார்த்திக்கும் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் வி.கே. சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இன்று (நேற்று) சட்டசபையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக இருக்குமா என்கிற கேள்விக்கு நிச்சயம் ஏற்படாது. ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன் நிச்சயமாக அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் .
இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் என்ன என்கிற கேள்விக்கு பிரிந்திருப்பது தான் முக்கிய காரணம். அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
ஓபிஎஸ் உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நிச்சயம் இருக்கிறது. எங்க கட்சிக்காரர்களுக்குள் நான் வித்தியாசம் ஒன்றும் பார்ப்பதில்லை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறாரா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
ஒரு சிலரின் ஆணவத்தால் அகங்காரத்தால் பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. ஒரு சில சுயநலவாதிகளால் தமிழகம் பாழடைந்து விட்டது, அவர்கள் செய்த தவறுகளால் தான், தீய சக்தியை திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அம்மாவினுடைய கட்சி அம்மாவின் தொண்டர்கள் பலர் தவறான பதவி வெறியால் நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் அம்மாவினுடைய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும் என்று கூறினார்.
சட்டசபையில் நடந்த பிரச்சனை பற்றி கேள்விக்கு, துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். துரோகிகள் துரோகிகள் தான் என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பிட்ட சில நபர்களை வைத்து வைத்துக்கொண்டு கட்சியை விட்டு யாரையும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் சேர்ந்து கட்சியின் தலைமை பதவியான பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் காலத்தில் விதி இருந்தது. அந்த விதியை பழனிசாமி மாற்றி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை மாற்றி 20 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் என்று தலைவரின் விதியையே மாற்றி அமைத்து விட்டார்கள். துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு தருவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இரட்டை இலை இருந்தும் திமுகவிற்கு 20 மாதங்களில் 5 ஆண்டுகளில் வரவேண்டிய கெட்ட பெயர் இருந்தும் ஏதோ 20,000 ஓட்டில் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நினைத்தோம். 67,000 வாக்கு வித்யாசத்தில் ஜெயிப்பது என்பது எதிர்க்கட்சியாக போட்டியிட்ட அதிமுக எங்கள் கோட்டை என்கிற இடத்தை கோட்டை விட்டுவிட்டது. செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று சொன்னார் என்று தெரியவில்லை என கூறினார்.