தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அனைத்து துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் முதன்மைக் கோரிக்கை, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதுதான். நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. தற்போது அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மேலும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் அரசு தரப்பில் காரணம் கூறப்படுகிறது. மேலும், பழைய பென்சன் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது சாத்தியமற்றது எனவும், பக்கத்து மாநிலங்களில் இத்திட்டம் மீதான முன்னெடுப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறுகின்றனர்.




தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் போராடி வருகின்றனர். 


பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுக்கும் அளவுக்கு சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் போராடி வருகின்றனர். அவர்கள் நடத்தாத போராட்டங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எண்ணற்ற போராட்டங்களை நடத்தி விட்டனர். தொடர்ந்து போராடியும் வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 23 முக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் குமாரவேல் முன்னிலை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் தங்கப்பழம், தனசேகர், முருகேசன் உட்பட 50க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர்.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறையில் 9 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 6 லட்சம் பேர் பென்சன் திட்டத்திலும், 3 லட்சம் பேர் ஓய்வூதிய திட்டத்திலும் உள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த ஒற்றைக்‌ கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்‌ மறுநிமிடமே இந்த இயக்கம்‌ கலைக்கப்படும்‌ என்ற இலக்கோடு துவங்கி பயணித்துக்‌ கொண்டிருக்கிறோம்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.


எங்களது இயக்கத்தின்‌ சார்பாக திமுக-வின்‌ தேர்தல்‌ கால வாக்குறுதியை நிறைவேற்றக்‌ கோரி முதலமைச்சருக்கு அஞ்சல்‌ அட்டை அனுப்பும்‌ போராட்டம்‌, மின்னஞ்சல்‌ அனுப்பும் போராட்டம்‌, கையெழுத்து இயக்கம்‌, மாவட்டத். தலைநகரங்களில்‌ கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌, சாலைமறியல் போராட்டம் உட்பட பல கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். தற்போது தொடர் காத்திருப்பு போராட்டம் 64வது இயக்க நடவடிக்கையாக இதை நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.