தஞ்சாவூர்: அரசு தரப்பில் மாற்று இடம் வழங்கப்பட்ட இடத்தில் குடியிருக்கும் தங்களை இடையூறு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாராசுரம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:


தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு மேற்கு பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு புறம்போக்கு இடத்தில் 48 குடும்பத்தை சேர்ந்த நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்தோம். நாங்கள் குடியிருந்த பகுதி கோயில் தோற்றத்தை மறைப்பதாக கூறி தொல்லியல் துறைக்கு இடம் தேவை என உரிய இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று இடம் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. 


எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு குடி பெயர்ந்து 1990 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். இந்நிலையில் அரண்மனை தேவஸ்தானம் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அவர்களின் இடம் என கூறி பகுதி கட்டவும், கோயில் திருப்பணிக்கு நன்கொடையும் கேட்கப்பட்டது. மேலும் நாங்கள் அத்து மீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வாடகை தர வேண்டும். இல்லாவிடில் வேறு நபர்களை குடியமர்த்தி விடுவோம் என்று மிரட்டுகின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதி முறையாக தொல்பொருள் இலாகா மற்றும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் சர்வே செய்யப்பட்டு வழங்கப்பட்ட பகுதியாகும்.


தற்போது இந்த இடத்தில் மாத வாடகை நிலுவையில் உள்ளது. மேலும் மாதம் வாடகை ரூ.500 வீதம் வருடத்திற்கு ரூ.6000 செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் தனது வீட்டை சுற்றி வேலை அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனது குடும்பத்துடன் விவசாய கூலி தொழிலாளி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ஜெய்சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


எனது வீட்டை சுற்றி நாலு புறமும் முள்வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் நாங்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.