தஞ்சாவூர்: ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வழக்கை விரைந்து விசாரித்து தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் அதிகமானோர் தஞ்சை பெசண்ட் அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ராஹத் தனியார் பஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் கமாலுதீன் என்பவர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதையடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ராஹத் பஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை முதலீடு செய்தனர்.


ஆரம்ப காலக்கட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.10,500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதை தெரிந்து மேலும் பலர் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ராஹத் நிறுவன உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பங்கு தொகை வழங்கப்படவில்லை.




தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பஸ் நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் ராஹத் பஸ் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கமாலுதீன் மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தங்களின் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கும் அதிகமானோர் புகார் மனுவை அளித்தனர்.


இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நீதி வேண்டும், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பெசண்ட் அரங்கம் எதிரில் ராஹத் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதற்கு ஜபருல்லா தலைமை வகித்தார். ஜலால்ஷேக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஹத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதில் ராஹத் வழக்கை துரிதப்படுத்த வேண்டும். ராஹத் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஹத் முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த வழக்கை துரிதப்படுத்தி தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உட்பட 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதனை துரிதப்படுத்த வேண்டும். முதலீடு செய்து ஏமாந்து நிற்கிறோம். இதனால் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளோம். எனவே அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.