தஞ்சாவூர்: வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்து பயன்பெறலாம் என்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமது பாரூக் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நிகழாண்டு நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய எ.ஐ.சி.எல் பொது காப்பீடு நிறுவனமானது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாளாக நவம்பர் 15ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சம்பா நெல் பயிருக்கு பிரீமியம் எவ்வளவு?


இந்த திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 548 பிரிமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று விண்ணப்ப படிவம் முன்மொழிவு படிவம் ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.




விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு செய்யலாம். பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு பதிவு செய்யும் விவசாயிகளின் அடங்கல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான முத்திரையை கண்டிப்பாக இடவேண்டும்.


பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தல்


இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என முத்திரை உள்ள அடங்கல்களை மீண்டும் பதிவேற்றம் செய்யக்கூடாது என பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்களில் தொகை செலுத்தும் போது பயிர் காப்பீடு செய்து உள்ள அனைத்து சர்வே எண்களும் அதற்கான பரப்பும் சாகுபடி செய்துள்ள கிராமமும் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து பின் அதற்கான பட்டியலை பெற்று பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


காப்பீடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


பயிர் காப்பீடு என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்


வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றியெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம், அது குறித்துத் தெரிந்தும் வைத்திருப்போம். ஆனால், விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றி பல விவசாயிகளுக்கும் தெரிவதில்லை. 


நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை.


தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காப்பீடு திட்டத்திற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து இதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். கூடவே அதற்கான பிரீமியம் தொகையையும் கட்ட வேண்டும். காப்பீடு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். 


காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அந்தத் திட்டத்தில் எப்போது இணைய வேண்டும் என்ற விபரங்களை அறிந்துகொண்டு, கொடுக்கப்பட்ட தேதிக்குள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.