,தஞ்சாவூர்: போக்குவரத்து கழகங்களின் பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பொறையாறு பணிமனை விபத்தில் பலியான தொழிலாளர்கள் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகப்பட்டினம் மண்டலம் பொறையாறு பணிமனையில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஓய்வறை கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலியானார்கள். இவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை பணிமனை முன்பு சிஐடியூ மத்திய சங்கத் தலைவர் த.காரல் மார்க்ஸ், ஏஐடியூசி  பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 
நினைவேந்தல் நிகழ்ச்சியில் கும்பகோணம், நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக்கு கழகத்திற்கு உட்பட்ட 21 பணிமனைகள், தலைமை அலுவலகங்களில் உள்ள அலுவலகம், ஓய்வறை,குளியல் அறை, கழிவறை கட்டிடங்களை வருடம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும். தஞ்சாவூர் நகர் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் பழைய கட்டிடங்களில் மழைக்காலங்களில் நீர் தேங்கி ஒழுகுவது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது சரி செய்யப்பட வேண்டும்.


ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் தரைத்தளங்கள் இல்லை. மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக உள்ளது. இந்த இடங்களில் புதிதாக தரைத்தளங்கள் புதிதாக  அமைக்கப்பட வேண்டும், அதேபோல அரசு அலுவலகங்களில் உள்ள பழமையான கட்டிடங்களையும் பராமரிக்கப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு தேவையான நிதி உதவியை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அளிக்க வேண்டும். பொறையாறு விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பத்தின் வாரிசுகளுக்கு விதிவிலக்கு அளித்து வாரிசு பணி வழங்கியது போன்று,  1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்து இறந்து போன,ஓய்வு பெற்ற தொழிலாளர் வாரிசுகளுக்கும் வாரிசு பணி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கும் வலியுறுத்தப்பட்டது. 


இதில் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன்,  ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ்,                   சிஐடியூ., மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் எஸ்.ராமசாமி, தெ.முருகானந்தம், சி.ராஜசேகர், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கே.சுகுமார், முருகவேல், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.