தசரா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம். நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நாட்டு மக்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும் பொழுது, முப்பெரும் தேவியர்களை வழிபாடு செய்து பத்தாம் நாளான விஜயதசமி அன்று புது கணக்கை துவங்கவும், பள்ளிப்படிப்பைத் துவங்க உகந்த நாளாகும். படிப்படியாக வளர வேண்டும் என்பதற்காக வீடுகளில் படிகள் அமைத்து அதில் கொலு அமைத்துள்ளனர். மகாபாரதத்தில் அர்ஜுனன் வன்னி மரத்திற்கு அடியில் ஆயுதங்களை பூஜை செய்த தினமே ஆயுத பூஜையாக கடைபிடிக்கப்படுகிறது. கலைகள் தொழில்கள் வளர்ந்து நாடு நாட்டு மக்கள் சுபிட்சம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக அதில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நவராத்திரிவிழாவை முன்னிட்டு அபயாம்பிகை மயில் உருவத்தில் சிவனை பூஜிக்கும் கோலத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சோடச தீபாராதனைகள் நடைபெற்றது திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத ஸ்ரீமாயூரநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொலுபொம்மைகள் பக்தர்களின் தரிசனத்திற்கு காட்சிபடுத்தி வைக்கபப்பட்டுள்ளது. நவராத்திரி 8ம் திருநாளான நேற்று அபயாம்பிகை மயில் உருவத்தில் சிவனை பூஜிக்கும் கோலத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.
Nitham Oru Vaanam: ஆயுதபூஜையில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
தொடர்ந்து ஓதுவாமூர்த்திகள் தேவாரபாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு பஞ்சமுக தீபாரதனை உள்ளிட்ட சோடச உபசார தீபாரதனை என்றழைக்கப்படும் 16 விதமான தீபாரதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.