நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக நடித்து திரையுலகில் அறிமுகமான அவர் சூதுகவ்வும்,பீட்சா-2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனுக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.
தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மன்மதலீலை, ஹாஸ்டல் ஆகிய படங்கள் வெளியான நிலையில் தற்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் இப்படத்தை வியகாம்18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் நித்தம் ஒரு வானம் படத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை ரித்து வர்மா, சூரரைப்போற்று புகழ் அபர்ணா பாலமுரளி, சிவ ஆத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஆகியோர் நடித்துள்ளனர்.
3 பேருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் இப்படம் இருக்கும் எனவும் இயக்குநர் கார்த்திக் தெரிவித்திருந்தார். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஆயுதபூஜையை முன்னிட்டு நித்தம் ஒரு வானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.