தஞ்சாவூர்: தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாகவும், இலவச பேருந்து என்பதால் ஏற்ற மறுக்கின்றனர் என்று கூறி தூய்மைப்பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தூய்மைப்பணியாளர்கள் குற்றச்சாட்டு


இலவச பேருந்து என்று பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் என்பதால் தரகுறைவாகும் நடத்துகின்றனர் என்று கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து இன்று காலை போராட்டம் நடத்தினர்.


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராம பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக செல்ல வேண்டும். இதனால் அவர்கள் நகர பேருந்துகளில் செல்வது வழக்கம். தினமும் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் இறங்கி மாறி செல்லும் நிலையும் உள்ளது.


பேருந்துகளில் ஏற்ற விடுவதில்லை


இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்குவதில்லை. அவ்வாறு இயக்கும் பேருந்தில் ஏற்ற விடுவதில்லை. பேருந்துகளில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.  தங்களை கண்டால் பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேகமாக சென்று விடுகின்றனர் என பல குற்றச்சாட்டுக்களை தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்து வந்தனர்.


பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்


இதற்கிடையில் இன்று காலையும் பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பு தெரிவித்ததாக கூறிய தூய்மை பணியாளர்கள் இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்


காலை நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 


இந்நிலையில் தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்காக அழைத்து சென்றது.


கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை இன்று காலை நகர பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேருந்தில் ஏற்ற‌ மறுத்த நடத்துனர் யேசுதாஸ் மற்றும் மாற்று நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருவரையும் பணியிடை மாற்றம் செய்து கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.