தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அனுமாநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயசுவாமி கோயில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. புராண கதைப் படி, ராவணனை வீழ்த்திய பிறகு ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமனுடன் அயோத்தி செல்லும் வழியில் தங்களை யாரோ பின்தொடர்வதை போல உணர்ந்தனர். பின்னர், அதுகுறித்து சிந்திக்கும்போது கரண் துஷ்னணை கொன்ற தோஷம் என அவர்கள் அறிந்துகொண்டனர்.
எனவே, இதனைப் போக்க, குடமுருட்டி ஆற்றங்கரையோரம் அமைந்த வில்வ மரத்தடியில் சிவபூஜை செய்ய முடிவு செய்து இதற்காக அனுமனை காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வர வேண்டும் என ராமர் உத்தரவிடுகிறார். அவரும் அங்கிருந்து லிங்கம் கொண்டு வரும் முன்னர், சீதா தேவி ஆற்று மணலிலேயே 107 சிவலிங்கங்ளுடன் பூஜைக்காக தயாரானபோது அனுமன் சிவலிங்கத்துடன் வந்துவிடுகிறார். லிங்கம் கொண்டுவருவதற்கு முன்னரே 107 லிங்கங்கள் தயார் செய்யப்பட்டதை அறிந்தால் அனுமன் வேதனைப்படுவார் என அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை 108ஆவது லிங்கமாக வைக்க சீதை அனுமதியளித்தார்” என்று கூறப்படுகிறது.
மேலும், அனுமன் தான் கீழே வைத்த லிங்கத்தை நகர்த்த முயலும்போது அதில் அவர் தோற்றதாகவும், அப்போது அவரது வால் அறுந்து அனுமன் கீழேவிழுந்தார் என நம்பப்படுவதால் நல்லூர் என்ற கிராமம் அனுமாநல்லூர் என அழைக்கப்படுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் இன்றும் பாபநாசம் 108 சிவாலயத்தில் 108ஆவது லிங்கமாக இருக்கிறது.
இன்றும் லிங்கங்கள் வரிசையாக கோயில் பிரகாரத்தில் இருக்கிறது. கோயிலின் தெற்கு திசையில் தனி சன்னதியில் அனுமன் இருப்பார். 107 லிங்கத்துடன்,108ஆவது லிங்கத்தையும் வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உண்டு.
இத்தகைய பெருமை கொண்ட தலத்தில், அமைந்துள்ள திருக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு அதற்காண திருப்பணி வேலைகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதன்படி கடந்த ஒன்றாம் தேதி மகாகணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி காப்பு கட்டுதல் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதையடுத்து கும்ப அலங்காரம், விசேஷ மூலமந்திர ஹோமம் தொடங்கி பிறகு மறுநாள் பஞ்சசுத்த ஹோமமும் அதனைத் தொடர்ந்து 3 கால யாக சாலை பூஜைகளுடன் மகா பூர்ணாஹதியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பிறகு, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடந்தது. அதன் பிறகு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்