தஞ்சாவூர்: அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை. தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பு இல்லாததால்தான் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை
தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை. இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக தொடங்கினோமோ, அந்தக் காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவும் மாற்றம் இல்லை. அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பதே தவறான கேள்வி. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
சில சுயநலவாதிகள் எண்ணதால் ஜெயலலிதாவின் கட்சி அழிகிறது
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
ஆனால் அதிமுகவுக்கு 2019ம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு விகிதம் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது. திமுகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது.
பணத்தை நம்பாமல் மக்களை நம்பினோம்
இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணி 18.5சதவீதம் வாக்கு விகிதத்தைப் பெற்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டோம். பல தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. பணத்தை நம்பாமல் மக்களை நம்பி போட்டியிட்டோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பு இல்லை
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிக்கின்றனர். ஆனால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. இதேபோல் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
2026 தேர்தலில் திமுக தோல்வியடையும்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க எப்படி பணம், அதிகார பலத்தை நம்பி போட்டியிட்டு தோல்வி அடைந்ததோ அதேபோல் 2026 தேர்தலில் தி.மு.க தோல்வியடையும். நாடாளுமன்ற தேர்தலில் கூட தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்களுக்கு ஓட்டு போடாவிட்டால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என கூறி மிரட்டி பணத்தை விநியோகம் செய்து தான் தி.மு.க வெற்றி பெற்றது.
டெபாசிட் பெறாத அதிமுக
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 13 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. மாறாக பல்வேறு பொய் தகவல்களை பரப்பி வாக்கு சதவீதம் சரியவில்லை என கூறி வருகின்றனர். இதை யாரும் நம்ப மாட்டார்கள். இரட்டை இலை சின்னம் இருந்தும் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை கண்டுள்ளது.
கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க சுயநலவாதிகள் கைக்கு போய்விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது. காவிரி நீர் விவாகரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோரிடம் சோனியாகாந்தி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி தமிழகத்திற்கு உரிய, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பெற்று தர வேண்டும். ஏனென்றால் கர்நாடகாவில் ஆளுவது காங்கிரஸ் கட்சி தான். தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும். மாறாக டெல்லியில் போய் பேசுவதால் எந்த பயனும் இல்லை. பெட்ரோலியத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறி உள்ளதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு, நாட்டுக்கு எது நல்லதோ அதனை செய்ய வேண்டும்.
பொது சிவில் சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்தார். அவரது வழியில் நாங்களும் அச்சட்டத்தை ஆதரிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாணவரணி செயலாளர் வக்கீல் நல்லத்துரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.