தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடந்த 2021ம் ஆண்டில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் என்று கூறி டாக்டர்கள், தொழிலதிபர்களிடம் பணம் அனுப்ப சொல்லி மோசடி செய்ய முயன்ற தம்பதிக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், முக்கியப் புள்ளிகள் என பலருக்கும் போன் செய்த மர்ம நபர் ஒருவர், `நான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் நேர்முக உதவியாளர் பேசுகிறேன். கொரோனா தடுப்பு பணி மற்றும் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் ரூ.50,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என அதிகாரி போலவே பேசி, `பேங்க் அக்கவுன்ட் நம்பர் மற்றும் டீடெய்ல் அனுப்பிவைக்கிறேன். பணத்தை அக்கவுன்ட்டில் போடுங்க' எனக் கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.
அதிர்ச்சியில் ஆழ்ந்த கலெக்டர்
கலெக்டர் பணம் கேட்கச் சொல்லி அவர் உதவியாளரே பேசுறாரே என்று சிலர் பணம் செலுத்த முடிவு செய்தனர். இருந்தாலும் மற்ற சிலருக்கு ஏதோ பொறி தட்டி சந்தேகம் எழ, கலெக்டரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த கலெக்டர், `நான் யாரிடமும் பணம் கேட்கச் சொல்லலை. என் பேரைத் தவறாக பயன்படுத்தி யாரோ பணம் பறிக்க முயற்சிக்கிறாங்க. நீங்க பணத்தை அக்கவுன்ட்டுக்கு அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். பின்னர் சைபர் க்ரைம் போலீஸார் இது குறித்து துரித விசாரணையில் இறங்கியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசடி தம்பதியின் அதிர்ச்சி தரும் பின்னணி
இந்த மோசடியில் ஈடுபட்ட இந்த தம்பதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானபாரதியும் (65) அவரின் மனைவி ரீட்டா பபியாவும் (50) என்பது தெரிய வந்தது. இவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் என்று தெரிவித்து வங்கி கணக்கிற்கு அனுப்பும் பணத்தை எப்படி எடுப்பார்கள் என்ற பின்னணியும் பெரும் அதிர்ச்சியை போலீசாருக்கு ஏற்படுத்தியது.
வங்கி கணக்கு நம்பரை ஆய்வு செய்ததில், அந்த நம்பர் கோயம்புத்துார் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (40) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. உடன் குறிப்பிட்ட வங்கிக் கணக்கை முடக்கிவிட்டு விசாரணைக்காக கோயம்புத்துார் சென்ற சைபர் க்ரைம் போலீசார் ரெஜினாவிடம் விசாரித்துள்ளனர். அவர் பியூட்டி பார்லர் நடத்திவருவது தெரியவந்தது. ரெஜினாவுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆசைகாட்டி அவரது வங்கிக் கணக்கை வாங்கி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானபாரதியும் (65) அவரின் மனைவி ரீட்டா பபியாவும் (50) மோசடி செய்தது தெரியவந்தது.
சொகுசாக வாழ ஆசைப்பட்டு மோசடியில் இறங்கினர்
இதையடுத்து அந்தத் தம்பதியைக் கண்காணித்ததில் அது உண்மையெனத் தெரியவந்தது. அதன் பிறகு ரீட்டா பபியா, தலைமறைவாக இருந்த சந்தான பாரதி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கலெக்டர்களின் பெயரைச் சொல்லி அவர்கள் இதுபோன்ற மோசடியை செய்து வந்த அதிர்ச்சித் தகவலும் வெளியானது. இருவரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு பல்வேறு மோசடிச் செயல்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் திருட்டு வழக்கு, திருப்பூரில் மோசடி வழக்கு எனத் தொடர்ந்து கைவரிசை காட்டிவந்ததில் இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர்தான் `கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி பணம் கேட்டால் அனைவரும் நம்புவாங்க. ஈஸியா பணம் கிடைக்கும். எந்த ரிஸ்க்கும் இருக்காது’ எனத் திட்டமிட்டு அதை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்கு எண்ணை வாங்குவர்
எந்த மாவட்டத்தில் மோசடி செய்வது என்பதை முடிவு செய்துகொண்டு அந்த மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இந்த தம்பதி தங்குவார்கள். அந்தப் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்களிடம், ``சினிமா ஷூட்டிங் நடக்க இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம், கிட்டத்தட்ட 100 ஆர்ட்டிஸ்ட் நடிக்கப்போறாங்க. நீங்க மேக்கப் போட வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் ஆகும்?” எனக் கேட்டு ஆசையைத் தூண்டுவார் சந்தானபாரதியின் மனைவி. அவர்களும் வேறு விவரம் எதுவும் கேட்காமல் ஒப்புக்கொள்வார்கள். `அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பு தரப்பு மேனேஜர் மூலமா அக்கவுன்ட்ல போடச் சொல்றேன். உங்க நம்பர் கொடுங்க; என்று வாங்கி தன் கணவர் சந்தானபாரதியிடம் கொடுத்துவிடுவார்.
வசமாக சிக்கிய மோசடி தம்பதிக்கு சிறை
பிரபலங்களிடம் பேசி இந்த வங்கிக்கணக்கை கூறி பணம் போட சொல்லி மோசடி செய்து வந்துள்ளனர். இதேபோல் தஞ்சாவூர் கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி மோசடிச் செயலில் இறங்கியுள்ளனர். பணம் கேட்டவர்கள் சுதாரித்துக்கொண்டு கலெக்டரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றதால் இந்த தம்பதி சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த தம்பதியை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1ல் நடந்து வந்தது. நீதிபதி எஸ். சுசீலா வழக்கை விசாரணை செய்து, குற்றம்சாட்ட சந்தானபாரதி அவரது மனைவி ரீட்டா பபியோலா ஆகிய இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.