தஞ்சாவூர்: ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் மாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏஐடியூசி நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் முடிவு செய்து இருக்காங்க.


ஏஐடியூசி மாநில நிர்வாக குழு கூட்டம்


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் ம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அக்டோபரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதுஎன்று தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கங்களின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் சங்க கூட்ட அரங்கில் நடந்தது. மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு,  பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.சிவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் நடைபெற்ற பணிகள் குறித்தும் ஏஐடியூசி மாநில குழு முடிவுகள் குறித்தும் உரையாற்றினார்.


கூட்டத்தில் மாநில இணைப் பொது செயலாளர்கள் ஜெ.குணசேகரன், கே ராஜமோகன், மாநில பொருளாளர் தி. கோவிந்தராஜன், மாநில செயலாளர்கள் பி.நாகேஷ், எம். எஸ்.கிருஷ்ணன், எம். கலியபெருமாள் மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் எம். மதன், எஸ் புஸ்பநாதன், தஞ்சாவூர் அன்பழகன், நாகப்பட்டினம் பி. ஆனந்தன், மயிலாடுதுறை டி. சம்பத், திருவண்ணாமலை கே.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும்


கூட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளாக கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.3ஆயிரம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. இதனை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், நிரந்தர  பணியாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலாளர் தரக்கட்டுப்பாடு தவறான முறையில் ஆய்வு செய்து பல்லாயிரக்கணக்கில் இழப்பு செலுத்த வற்புறுத்துவது என்ற மோசமான நிலை நீடிக்கிறது.


பட்டியல் எழுத்தர் விஷம் குடித்த சம்பவம்


மயிலாடுதுறை மாவட்டம் அகணி நெல் கொள்முதல் நிலையத்தில் இதுபோன்று அடாவடியாக ரெக்கவரி நிர்ணயிக்கப்பட்டதால் பட்டியல் எழுத்தர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். எனவே மேலாளர் தரக்கட்டுப்பாடு அவர்களை உடனடியாக வேலைநீக்கம் செய்ய வேண்டும், 60 வயதை கடந்த சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று மறுப்பதை கைவிடவேண்டும்,


மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது


வயது வரம்பு நிர்ணயிப்பதை கைவிட வலியுறுத்தி வருகிற 1-10-2014 அன்று மயிலாடுதுறை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. எடை குறைவு காரணமாக வேலை இன்றி இருக்கின்ற கொள்முதல் பணியாளர்களுக்கு உடனடியாக வேலை அளிக்க வேண்டும்,    எடை குறைவு காரணங்காட்டி நிரந்தரப்படுத்துவதை மறுக்கக்கூடாது. 2012ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது.


இதேபோன்று அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த தகுதியுள்ள அனைத்து கொள்முதல் பணியாளர்களையும் உடன் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும். கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 31-1-21 அன்று கூலி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அதே நிலை நீடிப்பதால் உடனடியாக சுமை தூக்கம் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ 15ம் , தினப்படியை பட்டியல் எழுத்தருக்கு ரூ150, உதவியாளர் மற்றும் காவலர்களுக்கு ரூ120 உயர்த்தி வழங்க வேண்டும்.


ஓய்வூதிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


மிக குறைவான ஓவ்வூதியம் பெற்று இறுதி நாளில் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நிலையை கருணையுடன் பரிசீலித்து குறைந்தபட்சம் மாதம் ரூ10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் இணைக்க வேண்டுகிறோம். இதனை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்டோபர் மாதம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.


கூட்டுறவுத்துறை ஆதிக்கம்


கூட்டுறவு துறையில் இருந்து நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அதிகாரிகள் அயல் பணிக்கு அனுப்பி வைப்பது உடனடியாக கைவிட வேண்டும், தற்போது பணிபுரிந்து வருபவர்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சங்க மாநிலச் செயலாளர் கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு ஒரு கோடி பனை விதை நடும் நடும் பணியில் முன் நின்று செயலாற்றுவது குறித்து  பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட பனை விதை நடும் பணியில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக ஈடுபட்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.