தஞ்சாவூர்: நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு ரூ. 3 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே வலியுறுத்தினார்.


தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:


3 லட்சம் விவசாயிகள் தற்கொலை


இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். குறிப்பாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரிழந்தனர். தற்போது விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இல்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருளுக்கான விலை மட்டும் உயரவே இல்லை.


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை


ஆனால் விதை, உரம், பூச்சி மருந்து, மின்சாரம், தண்ணீர் போன்றவற்றின் விலை உயர்ந்து வருகிறது. புயல், மழை, வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்போது, அதற்கான இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதனால் பொருளாதாரத்தில் விவசாயிகள் மிகவும் பின்தங்கி உள்ளனர். பிரதம மந்திரி பெயரிலேயே பயிர் காப்பீட்டு திட்டம் இருந்தாலும், அதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கப்படுகிறது. இதனால் சாகுபடி செய்ய இயலாமல் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். ஆனால், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.


குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் ஒன்றரை மடங்கு லாபம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பரிந்துரை செய்யப்பட்டு 18 ஆண்டுகளாகியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.


கரும்பு, பருத்திக்கும் லாபகரமான விலை வேண்டும்


நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ. 2,350 உடன் மாநில அரசு ஊக்கத்தொகையைச் சேர்த்து மொத்தம் ரூ. 2,450 மட்டுமே வழங்கப்படுவது போதுமானதாக இல்லை. மத்திய அரசு குவிண்டாலுக்கு குறைந்த பட்சமாக ரூ. 3,000 வழங்க வேண்டும். இதேபோல, கரும்புக்கும், பருத்திக்கும் லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஒருமுறை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். இந்த இலக்கை அடைய வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய இணைச் செயலர் டி. ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன், மாநிலத் துணைத் தலைவர் கே. முகமது அலி, துணைச் செயலர் எஸ். துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் வரவேற்றார். நிறைவாக, மாவட்டப் பொருளாளர் எம். பழனி அய்யா நன்றி கூறினார்.