தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரத்தின் வெப்பத் தாக்கத்தில் இருந்து மக்கள் வெகுவாக தப்பித்துக் கொண்டனர். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் சரியாகவே டியூட்டி பார்க்கலை என்பதும் உண்மைதான்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பம் ஆன போது வெயில் தாக்கம் மக்களை அவதிக்கு உள்ளாக்கி வந்தது. இதனால் தர்பூசணி, கிர்ணிப்பழங்கள், பழ ஜூஸ்கள், சர்பத், நுங்கு, இளநீர் விற்பனை சக்கைபோடு போட்டது. கத்திரி வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். காலை தொடங்கிய வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரித்தது.
சாலைகளில் கானல் நீர் பரவலாக தென்பட்டது. இப்படி ஆரம்பத்தில் என்னவோ கத்திரி வெயில் மக்களை கதறவிட்டாலும் அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை ராசா... இங்கு நான்தான் மஹாராஜா என்பது போல் அக்னி நட்சத்திரத்தையே ஆட வைத்துவிட்டது மழை. மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு லேசா பெய்த மழை முதல் வாரத்திற்கு பின்னர் அடிதூள் என்று மக்கள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு அவ்வபோது வெளுத்து கட்டியது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, ஒரத்தநாடு, வல்லம், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபவாசத்திரம், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்ச்சியாகவும், விட்டு, விட்டும் மிதமான மழையும், கனமழையும் பெய்தது.
சில நாட்கள் அதிகாலையில் ஆரம்பித்து மாலை வரை விட்டு விட்டு பெய்த மழையால் அக்னி நட்சத்திரம் அப்பீட் ஆனது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி வெயிலாலை தன் வாலைக்கூட ஆட்ட முடியாத அளவிற்கு தஞ்சை மாவட்டத்தில் மழை தன் ஆதிக்கத்தை காட்டியது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு வயலை தயார் செய்ய பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பலரும் தங்கள் வயலை சாகுபடிக்கு பயன்படுத்த தயார் செய்யும் பணிகளில் இறங்கினர்.
இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் சாகுபடி செய்திருந்த தாருடன் கூடிய சுமார் 10- ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் கீழே சாய்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் வாழை காய்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு பிறகு அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களும் கீழே விழுந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் முழுவதும் கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் முன்னேழு நாட்கள், பின்னேழு நாட்கள் என்று கோடையில் அக்னி நட்சத்திரத்தின் உச்ச நாட்களாக நம் முன்னோர்கள் கணக்கிட்டு உள்ள காலத்தில் சரியாக கனமழை பெய்து வெயில் தாக்கத்தை முற்றிலும் குறைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அக்னி நட்சத்திர காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தின் ஆட்டத்தை ஆப் செய்துவிட்டது மழை மஹாராஜா என்றால் மிகையில்லை. போய்வா... அடுத்தாண்டு பார்ப்போம் என்று அக்னி நட்சத்திரத்தை டாட்டா காட்டி அனுப்பி விட்டது மழை.