திண்டுக்கல்லுன்னா பூட்டு, திருநெல்வேலின்னா அல்வா, மணப்பாறைன்னா முறுக்கு என்று ஊருக்கு ஒரு பெருமை இருக்கும். ஆனால் பெருமைகள்... அதை விட பெருமைகள்... இன்னும் பெருமைகள் என்று தஞ்சாவூரின் பெருமைகள் அசர அடிக்கும். பெரிய கோயில் தொடங்கி அரண்மனை, சிவகங்கை பூங்கா, அரண்மனை, அகழி, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, கலைத்தட்டு என்று அடுக்கலாம்... அடுக்கலாம்... அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோல் இன்னொரு பெருமையும் இருக்கு.



அதுதான் சூரக்கோட்டை பண்ணை. நடிப்புன்னு சொன்னால் சட்டென்று செவாலியே நடிகர் திலகம் சிவாஜிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படி கோலிவுட்டையே தன் நடிப்பால் கலக்கிய மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இயற்பெயர் விழுப்புரம் சின்னையா கணேசமூர்த்தி ஆகும். சின்னையாவுக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4வது மகனாக விழுப்புரத்தில் 1928 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தார்.  சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை கிராமம்தான். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.


அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார். கணவர் சிறை சென்று விட்டதால் ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சிவாஜிக்கு 4 வயதாக இருக்கும் போது சின்னையா மன்றாயர் நன்னடத்தைக்காக தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பிறகு சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரத்திற்கு குடியேறியது.


தஞ்சை சூரக்கோட்டையில் இருக்கும் அவரது பண்ணை சுமார் 48 ஏக்கர் ஆகும். பண்ணை ஓரத்தில் இருக்கும் ஒரு கூரை வீட்டில் தான் சிவாஜி குடும்பத்தினர் இருந்துள்ளனர். பின்பு சிவாஜி சினிமாவிற்கு வந்த பிறகு, வீட்டை சுற்றியுள்ள 48 ஏக்கர் இடத்தையும் வாங்கி அந்த இடத்தில் ஒரு பெரிய வீட்டையும் கட்டியுள்ளார். முழுவதும் தென்னந்தோப்புதான்.




மாட்டு வண்டிகள் சூழ அந்த வீடானது 60 ஆண்டுகள் பழமையான மிகவும் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பொங்கல் பண்டிகை தோறும் தவறாமல் நடிகர் பிரபு குடும்பத்தினர் பொங்கல் விழாவை இங்கு வந்து கொண்டாடுகின்றனர். தஞ்சை சுற்றியுள்ள பக்கத்து மாவட்டங்களுக்கு படப்பிடிப்புக்காக நடிகர் பிரபு குடும்பத்தினர் யார் வந்தாலும் இந்த பண்ணைக்கு வந்து செல்வதும் வழக்கம். சில தமிழ் படங்களுக்கும் இந்த பண்ணையில் படப்பிடிப்புகளும் நடந்துள்ளது.


தஞ்சைக்கு சுற்றுலாவாக வருபவர்கள் சூரக்கோட்டை பண்ணையையும் போய் பார்த்து வருகின்றனர். தஞ்சையின் பெருமைகளின் அடையாளமாக சிவாஜியின் பண்ணையும், அவர் வளர்ந்த வீடும் மக்கள் மத்தியில் பிரசித்தமாக விளங்கி வருகிறது.