இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,100 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, 2 இணையர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு., சேகர்பாபு, எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 2022-2023 ஆம் நிதியாண்டில் அறநிலையத்துறை சார்பில் 500 இணையருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டு 600 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2022-2023 மற்றும் 2023-2024ம் ஆண்டு 1100 இணையர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்வை நிறைவு செய்யும் விதமாக கடைசி 2 இணையர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.
அறநிலையத்துறை சார்பிலான இலவச திருமண நிகழ்ச்சியில் இணையருக்கு தலா 4 கிராம் தங்க தாலி, கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட 31 பொருட்கள் சீர் வரிசை இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 50,000 ரூபாயாகும். திருமணம் செய்த 2 இணையருக்கும் இலவசமாக சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எல்லா அணியை விட சிறந்த அணியாக செயல்பட்டு வருவது இளைஞர் அணிதான். விரைவில் சேலத்தில் மாநாடு நடைபெற உள்ளது அதற்கான செயல் வீரர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர் அணியை ஊக்கப்படுத்த, சிறப்பாக செயல்படுத்த, மேலும் வளர்ச்சியடை அனைவரும் விரும்புகின்றனர். திமுகவின் வளர்ச்சியை பிடிக்காமல், தவறான பிரச்சாரங்கள், பொய் செய்திகளை ஊடகங்களை பயன்படுத்தி மக்களை குழப்பிக்கொண்டிருக்கும் செய்தியை பார்த்துக்கொண்டிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் இந்த குழப்பத்தை ஏற்படுத்தட்டும். ஏன் அண்ணாமலை ஏற்படுத்தினால் கூட கவலைப்பட மாட்டேன். ஆனால் மத்தியில் இருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அளித்த பேட்டியில், கோயிலில் கொள்ளை அடித்து வருவதாக கூறியுள்ளார். இதற்கான விளக்கத்தை அமைச்சர் சேகர் பாபு அளித்துள்ளார். நான் பணிவோட கேட்டுக்கொள்கிறேன் இதுவரை 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. உண்மையில் பக்தி என்று இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். ஆனால் அது பக்தி இல்லை பகல் வேஷம். மக்களை ஏமாற்றுவதற்காக வேஷம் போடுகிறார்.
அதேபோல் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் அந்த வாக்கு இல்லாமலும் நாங்கள் வெற்றி பெருவோம் என நான் சொன்னதாக பொய் தகவல் பரப்பி வருகிறார். அவர் மீது புகார் அளித்துள்ளேன். இப்படி வளர்ந்து வரும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென கங்கணம்கட்டி வருகின்றனர். அதனை முறையடிக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் தக்க பதில் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.