மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் 35 வயதான மாயகிருஷ்ணன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் 6 பேர் அண்ணன் தம்பிகளும், வயதான தாய், தந்தை உள்ளனர். இதில் 4 பேருக்கு திருமணமாகி தனியாக சென்ற நிலையில், இவரும் இவரது தம்பி ராம்குமாரும் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாயகிருஷ்ணனின் கடின உழைப்பைக் கண்ட                                                காரைக்குடியை சேர்ந்த அவரது நண்பர் கணேசன், தேவகோட்டையை சேர்ந்த ராஜா என்பவர் மலேசியாவில் உள்ள தனது எஸ்ட்டி கார்னர் என்ற ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார் என்றும், மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கேள்விப்பட்டு அவரது ஏஜென்ட்டிடம் மாயகிருஷ்ணனை அனுப்பி வைத்துள்ளார்.




தேவகோட்டையை சேர்ந்த ஏஜென்ட் பாலமுருகன் என்பவரிடம் மாயகிருஷ்ணன் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாயகிருஷ்ணன் மலேசியா நாட்டிற்கு பிப்ரவரி 20 -ஆம் தேதி திருச்சியில் விமானம் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை கேட்டு மாயகிருஷ்ணனும், அவரது தம்பி ராம்குமாரும் திருச்சி விமானநிலையம் சென்றுள்ளனர்.  விமானநிலயத்திற்குள் நுழையும்போது ஏஜென்ட்  பாலமுருகன் விசாவை அளித்துள்ளார். அதில் டூரிஸ்ட் விசா என்று இருந்துள்ளது, அதனை கண்டு திடுக்கிட்ட மாயகிருஷ்ணனின் தம்பி ராம்குமார், ஏன் ஓட்டல் வேலைக்கான விசா கொடுக்காமல் டிராவலிங் விசா கொடுத்துள்ளீர்கள்? என்று கேட்டதற்கு, மலேசியாவில் உள்ள எங்கள் ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச்  செல்பவர்களை இப்படித்தான் அழைத்துப் போகிறோம் என்றும், 2 மாதத்திற்குள் வேலைக்கான விசா வழங்கப்படும் என்று கூறியதை நம்பி மாயகிருஷ்ணனை மலேசியாவிற்கு  அனுப்பிவிட்டு ராம்குமார் வீடு திரும்பியுள்ளார்.




அதனைத் தொடர்ந்து மலேசியா சென்ற மாயகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வாரம் தோறும் செல்போனில் பேசியுள்ளார், அப்போது தனக்கு தினந்தோறும் 10 மணி நேர வேலை என்றும், காய்கறி நறுக்குவது, சாப்பாடு பரிமாறுவது என்று ஓய்வில்லாமல் வேலை வாங்குகிறார்கள். ஓய்வெடுக்கவே முடிவதில்லை என்றும் கூறியுள்ளார். கொத்தனார் வேலைசெய்த அனுபவம் இருப்பதால் ஓட்டல் வேலையை முழுமூச்சுடன் செய்துள்ளார். மாதம் முடிந்ததும் சம்பளம் கேட்டதற்கு அடுத்த மாதம் சேர்த்து உன் வீட்டிற்கு அனுப்பிவைக்கிறோம் என்று கூறியுள்ளார்.  அதை நம்பி இரண்டு மாத முடிவில் மாயகிருஷ்ணன் சம்பளம் கேட்டதற்கு சம்பளத்தை வங்கி மூலம் உன் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம் என்று கூறியுள்ளார். ஆனால், வீட்டில் உள்ளவர்களின்  வங்கி கணக்கில் மாயகிருஷ்ணன் சம்பள பணம்  வரவு வைக்கவே இல்லை.




இதற்கிடையே மாயகிருஷ்ணன் உடல்நலம் இல்லாமல் இருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு கிடைத்த தகவலின்பேரில் அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரை அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில் திடீரென ஒருநாள், சம்பளம் கேட்டதற்கு என்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்கின்றனர். நாளுக்கு நாள் வேலையை அதிகப்படுத்தி வருகின்றனர். என்னால் முடியவில்லை, என்னை எப்படியாவது காப்பாற்றி அழைத்துவிடுங்கள் என்று அழுது புலம்பியுள்ளார். மாயகிருஷ்ணன் குடும்பத்தினர் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டதற்கு அவர் முறையான எந்த பதிலும் கூறாமல் இருந்ததாகவும், திடீரென்று ஒருநாள் ஓர் ஆடியோ மெசேஜ் வந்துள்ளது, அதில் மாயகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ஓட்டலிலிருந்து அவரை துரத்திவிட்டதாகவும், மன நலம்குன்றி அலைந்து திரிவதாகவும் அவரது வீட்டாரிடம் கூறி எப்படியாவது அழைக்கச் சொல்லுங்கள் என்றும், அப்படி இல்லை என்றால் மனநலம் பாதித்து உயிரிழந்துவிடுவார் என எச்சரித்த  செய்தி மாயகிருஷ்ணனின் குடும்பத்தாருக்குக் கிடைத்துள்ளது.




நிலைமை கைமீறிப்போய்விட்டதை உணர்ந்த குடும்பத்தார் உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் இது குறித்து முறையிட்டு  காரைக்குடிக்குச்  சென்று தன் மகனை கொண்டுவர ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து காரைக்குடியில் இருக்கும் மாயகிருஷ்ணனின் நண்பர் மலேசியா ஓட்டல் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து மாயகிருஷ்ணனனை அனுப்பி வைக்கிறேன் அடுத்த மாதம்  மாயகிருஷ்ணனின் உறவினர்களை காரைக்குடிக்கு வரச் சொல்லியுள்ளார். அதனை நம்பி மாயகிருஷ்ணனின் உறவினர்கள்  காரைக்குடிக்குச் சென்றபோது அங்கே யாரும் இல்லை எனவும், வரும் அக்டோபர் 30 -ஆம் தேதிக்குள் மாயகிருஷ்ணனை அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.  இவர்களும் அதை நம்பி ஊருக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் அப்போதும் மாயகிருஷ்ணனை ஊர் திரும்பாததால் அக்டோபர் 30-க்குள்  அனுப்பவில்லையே என கேட்டதற்கு ஓட்டல் உரிமையாளர் அதற்கான பதிலை கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில்  கடந்த  17 -ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டக் காவல்கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளது. 




இதற்கிடையே மலேசியா ஓட்டல் உரிமையாளர் ராஜா என்பவர் வாட்ஸ் அப் கால்மூலம் மாயகிருஷ்ணன் பெற்றோரிடம் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது நீங்கள் எங்கே சென்றாலும் என்னை எதுவும் செய்யமுடியாது, அவன் 3 மாதத்திற்குமேல் வேலை செய்யவில்லை, நான் அழைத்து வந்ததற்கான தொகையை இன்னும் வசூல் செய்யவில்லை, அதற்குள் அவனை அனுப்ப வேண்டும் என்றால் தனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் அனுப்பி வையுங்கள், அப்போது தான் நான் அவனை விமானம் ஏற்றுவேன் என்று கறாராகப் பேசியுள்ளார். அப்போது மாயகிருஷ்ணனின்  முகத்தை காட்டுங்கள் என்று அவரது தாய் கெஞ்சியுள்ளார், கடந்த 2 தினங்களுக்கு முன்பு  மாயகிருஷ்ணனை பேசவிடாமல் முகத்தை மட்டும் காட்டியுள்ளனர். மாயகிருஷ்ணன் சோர்வான முகத்தைக் கண்டதும் தாய் மற்றும் சகேதரர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.




பணம் கட்டினால்தான் மாயகிருஷ்ணனை  அனுப்புவதாகத் தெரிவித்ததால் படுத்த படுக்கையாக உள்ள மாயகிருஷ்ணனின் தகப்பனார், பணம் அனுப்புகிற அளவிற்கு வசதியும், வழியும் இல்லாமல் புலம்பி வருகின்றனர்.  விசிட்டிங் விசாவில் சென்றவர் பல மாதங்கள் தங்கியிருந்தால் அதற்கு மலேசியாவில் தண்டனை உண்டு, மலேசியா அரசு இரண்டு மாதம்வரை முகாமில் அடைத்து வைத்துவிட்டு அதன்பிறகுதான் அனுப்புவார்கள். அதற்காக உடல்நலமில்லாத மாயகிருஷ்ணனை அறையிலேயே வைத்துப் பூட்டிவைத்துள்ளனர் என்றும் தனது மகனை தமிழக அரசு மீட்டுத்தரவேண்டும் எனவும், மாயகிருஷ்ணனை அடித்து உதைத்து நாசப்படுத்திய ஓட்டல் உரிமையாளர் ராஜா என்பவரது மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாயகிருஷ்ணனது மருத்துவ செலவையும் உரிய நட்ட ஈட்டையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் அவரது தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.