தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் காவிரி ஆறு, விளாங்குடி மற்றும் வாழ்க்கை கிராம கொள்ளிடம் ஆற்றில், மணல் குவாரி அமைக்க கூடாது என விவசாயிகள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி, கலெக்டர் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில், காவிரி ஆற்றிலும், திருவையாறு அருகே விளாங்குடி, வாழ்க்கை கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்ட மணல் குவாரிக்கு எதிராக, கடந்த 2018ம் ஆண்டு பவனமங்கலத்தை சேர்ந்த பாலகணேஷ், பொன்னுராமன்,  விளாங்குடியை சேர்ந்த  சச்சிதானந்தம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராம பகுதிகளில், மணல் பரப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பவனமங்கலத்தில் காவிரி ஆற்றிலும், விளாங்குடி,வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலும் ஆய்வு செய்தார்.





ஆய்வின்போது, கலெக்டரிடம் பொன்னுராமன்,பாலகணேஷ், வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் அளித்த மனுவில்; எங்கள் பகுதி கிராமங்களுக்கு உயிர்நாடியாக விளங்குவது காவிரியே ஆகும். எங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு காவிரியே ஆதாரம் ஆகும்.  

எங்களது கிராமம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள காவிரி அணையிலிருந்து ஒரு கி.மீ க்குள் அமைந்துள்ளது. இதனால் ஆற்றில் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் ஆற்று மணலை அடித்துச்சென்றுவிடும். இதன் காரணமாக ஆறு பள்ளமாகவும், எங்களது ஊர் மேடாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக எங்கள் ஊருக்கு திருக்காட்டுப்பள்ளி அணைக்கு மேற்கில், புதுச்சத்திரம் கிராமத்தில் பாசனவாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் ஏறி பாய்வதே இல்லை.

மேலும், புதுச்சத்திரம் மற்றும் விஷ்ணம்பேட்டை கிராமங்களை கடந்து எங்கள் ஊருக்கு பாசன நீர் வருவதே இல்லை. இதன் காரணமாக எங்கள் ஊர் முழுவதும் மோட்டார்கள் மூலம் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீருக்கு ஆதாரமாக இருப்பது ஆற்றில் படிந்துள்ள மணலே ஆகும். இந்த மணலை அப்புறப்படுத்திவிட்டால் எங்கள் ஊரின் மோட்டார்கள் வறண்டுவிடும். எங்கள் ஊரின் குடிநீர் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.





கடந்த முறை பவனமங்கலம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க முற்பட்டபோது 01/05/2018 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மணல்குவாரி அமைப்பதை தவிர்க்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன் முடிவுகள் அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் கிராம மக்களின் நலனுக்கும் கிராம சபையின் முடிவுகளுக்கும் எதிராக குவாரி அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

விளாங்குடி சச்சிதானந்தம் அளித்த மனுவில்; எங்கள் பகுதியில் மணலை எடுத்தால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமும் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கொள்ளிடம் ஆற்றில் சுமார் 22 ஆழ்துளை கிணறுகள் அமைத்து 8 மாவட்டங்களுக்கு மேல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக எடுத்து செல்லப்படுகிறது. மேலும், மணல் குவாரி அமைத்தால் கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.

ஆய்வின் போது, ஆர்.டி.ஓ.,(பொ) பழனிவேல்,தாசில்தார்கள் பழனியப்பன்,பெர்சியா, காவிரி வடிகால் கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, கனிம வள செயற் பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.