நாகை நம்பியார்நகர்  கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கடலில் மீன் பிடிக்கும்போது பைபர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

 

நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவர் கிராமங்களில் நம்பியார் நகர் மீனவ கிராமமும் ஒன்று. இங்கு என்பதுக்கும் மேற்பட்ட விசைப்படகு 300க்கும் மேற்பட்ட சைபர் படகில் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி வழக்கம் போல நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 21ம் தேதி அன்று நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதிகாலை அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி, ரகு, சிவசங்கரன் உள்ளிட்ட ஐந்து பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அன்று இரவு நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேர் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கடல் சீற்றம்  காரணமாக பெரிய கடல் அலை படகில் மோதியது.

 


 



 

 

இதில் அய்யாசாமி திடீரென கடலில் நிலை தடுமாறி விழுந்தார். இதனையடுத்து அய்யாசாமியை சக மீனவர்கள்  தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மீன்வளத்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்தனர்.  கடந்த இரண்டு நாட்களாக பத்திற்கும் மேற்பட்ட பைபர் படகில் சக மீனவர்கள் தேடும் பணியில்  ஈடுபட்டு வந்தனர். இன்று காலை அய்யாசாமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நம்பியார் நகர் கிராமத்திற்கு அவரது உடலை கொண்டு வந்தனர். அய்யாசாமியின் உடலை கண்ட மனைவி மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மீனவர்  உயிரிழந்த சம்பவம் நம்பியார்நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் உயிரிழப்பு குறித்து கடலோர காவல் குழுவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.