நன்னிலம் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் அரசு பேருந்து குடவாசலில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு நன்னிலம் வந்து கொண்டிருந்த போது சலிப்பேரி என்கிற இடத்தில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தூங்க மூஞ்சி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் மேற்கூரை உள்ளிட்டவை முழுவதுமாக சிதிலம் அடைந்தது. இதனையடுத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பொது மக்களை மீட்டதுடன் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸிற்கு  தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மூன்று ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்களை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 




அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஒரத்தில் இருந்த மரத்தில் மோதிய இடத்தில் குடியிருப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் ரவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூரைச் சேர்ந்த நரசிம்மன் ஸ்ரீவாஞ்சியத்தை சேர்ந்த சாரதா சுதா தனலெட்சுமி குடவாசலை சேர்ந்த சாமிநாதன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயம் அடைந்து நன்னிடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




நன்னிலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதேபோன்று அரசு பேருந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் அதிக அளவில் விபத்தில் சிக்குகின்றன.  அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு முன்னால் பேருந்தை முழுமையாக பராமரித்த பின்னரே இயக்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதே போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் போக்குவரத்து துறை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை முழுமையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண