தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து வரும் செப்டம்பர் 20ம் தேதி 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


திருவாரூரில் ஐ.என்.டி.யு‌. சி , சிஐடியு, ஏ ஐ டி யூ சி, ஏ ஐ சி சி டி யு, உள்ளிட்ட தொழிற்சங்கங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க  அமைப்புகள் இணைந்து நேற்று கூட்டாக தற்போதைய தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். இந்த விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் கூறியதாவது: விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி தங்களுடைய நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக கொண்டு வந்த அமைப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இதனை உருவாக்கினார். ஆனால் அவர் உருவாக்கிய கொள்கையை தவிர்த்து விட்டு, தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணிகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும்  சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. அதுபோல் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன நவீன அரசி ஆலைகளில் இயக்குனர், உதவி இயக்குனர், மின்  இணைப்பாளர் ஆகிய பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசமான நடவடிக்கைகளை ஏற்க முடியாது. தமிழக அரசு இதனை  கைவிட வேண்டும். 




விவசாயிகள் எப்படி இந்த நுகர்வு பொருள் வாணிபக் கழகம் உருவாக ஒருங்கிணைந்து போராடினீர்களோ இதனை, நிலை நிறுத்திக் கொள்ளவும் போராட வேண்டிய நிலை தற்போது உருவாகி உள்ளது. எனவே வரும் செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் நவீன அரிசி ஆலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் நுகர்வோர் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகும் தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், ஒரு நாள் வேலை நிறுத்தம் அதனை தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். 




மாநாட்டில் முன்னதாக பேசிய திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் எப்போதும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் உணவுத்துறை அமைச்சராக நியமிப்பார்கள். ஆனால் முதன் முறையாக அதிகமாக காய்கறி உற்பத்தியும் பணப்பயிர் உற்பத்தியும் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணியை எதற்காக நியமித்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் டெல்டா மாவட்டங்களாகும். எனவே இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தான் இதன் முக்கியத்துவம் தெரியும் ஆனால் சம்பந்தமில்லாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள். தேர்வு செய்யும் உரிமை முதலமைச்சரிடம் இருக்கு என்பதற்காக பொருத்தமில்லாத ஒருவரை தேர்ந்தெடுப்பதன் மூலமாக என்ன மாதிரியான நிலைமைகள் ஏற்படும் என்பதற்கு இது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என கடுமையாக சாடினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண