தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 66 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 48 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். இது வரை 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்காக 1.34 லட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 57 சவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 17 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 56.5 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 721 இடங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் 119 இடங்களிலும் என மொத்தம் 840 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 3,360 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களில் பொது மக்கள் அதிக அளவில் வராததால், 85,328 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார துறையினர் காலை முதல் மதியம் வரை இலக்கினை எட்டி விடுவார்கள். ஆனால் மாலை வரை இலக்கினை எட்டாததால், முகாமில் உள்ள சுகாரத்துறையினர், அப்பகுதியிலுள்ளவர்களிடம் கெஞ்சியபடி, தடுப்பூசி செலுத்த வேண்டி கேட்டனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு இன்னமும் போதுமான விழிப்புணர்வு ஏற்படாததால், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வரவில்லை. இதனால் மாலை 7 மணி வரை முகாமிலேயே, பொது மக்கள் யாராவது தடுப்பூசி செலுத்தி கொள்ள வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், கும்பகோணத்தில் நடைபெற்ற முகாமில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், கொரோனா வைரஸ் போன்று உருவத்தில், கும்பகோணத்திலுள்ள மக்கள் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள் , பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களிடம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என நுாதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் 4513 பேரும், பூதலுார் வட்டாரத்தில் 4767 பேரும், கும்பகோணம் வட்டாரத்தில் 14672 பேரும், மதுக்கூர் வட்டாரத்தில் 3251 பேரும, ஒரத்தநாடு வட்டாரத்தில் 4838 பேரும், பாபநாசம் வட்டாரத்தில் 4077 பேரும், பட்டுக்கோட்டைவட்டாரத்தில் 8969 பேரும், பேராவூரணி வட்டாரத்தில் 5417 பேரும், சேதுபாவசத்திரம் வட்டாரத்தில் 5417 பேரும், தஞ்சாவூர் வட்டாரத்தில் 15945 பேரும், திருப்பனந்தாள் வட்டாரத்தில் 4200 பேரும், திருவையாறு வட்டாரத்தில் 3720 பேரும், திருவிடைமருதுார் வட்டாரத்தில் 5685 பேரும், திருவோணம் வட்டாரத்தில் 2602 பேரும் என மொத்தம் 84328 பேர் தடுப்பூசி செலத்தி கொண்டுள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் கேட்டு கொண்டுள்ளார்.