ஈரப்பதத்தை கணக்கு காண்பித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்

 

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணத்தினால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நிகழாண்டில் 1.37 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்து தற்போது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து வருகின்றன இதனை கண்டு விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.



இந்த நிலையில் விவசாயிகள் தங்களது வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பின்னர் அறுவடை இயந்திரம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூலம் தங்களது நெல் பயிரை அறுவடை செய்து வெயில் அடிக்கும் நேரத்தில் சாலையில் கொட்டி காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு செல்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஈரப்பதத்தின் அளவை காண்பித்து கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு 17 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அறுவடை செய்யும்பொழுது நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.



இதன்காரணமாக நெல்மணிகளை காயவைத்து அதன் பின்னரே கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றாலும் 20 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் வரை நெல்மணிகளில் ஈரப்பதம் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக கடந்த காலங்களில் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு ஈரப்பதத்தின் அளவை உயர்த்தி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதே போன்று இந்த ஆண்டும் ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதனால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை உருவாகும் ஏற்கனவே கடன் பெற்று சாகுபடி செய்த நிலையில் செய்த செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியாத நிலை உருவாகும். ஆகையால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நெல்லின் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.