தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுக்கா, துகிலி கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ நாராயண பெருமாள் உற்சவர் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி அனுக்கிரக ஆஞ்சநேயர் விநாயகர் சன்னதிகள் உள்ளது.கடந்த 2001 மற்றும் 2016ம் ஆம் ஆண்டுகளில் கோயில் முழுவதும் திருப்பணி செய்யப்பட்ட மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் 2016 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது மூலவர் விமானக் கலசத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள செப்புக் கலசத்தில் தங்க முலாம் வேயப்பட்டு பளபளப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், காலையில் பார்த்தபோது விமான கலசத்தை காணாமல் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, கோயில் தக்காரும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் செயல் அலுவலருமான கிருஷ்ணகுமார், திருப்பனந்தாள் சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணா மற்றும் அலுவலர்கள் கோவிலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருட்டுப்போன கலசம் சுமார் ஒன்றரை அடி உயரம் ஐந்து கிலோ எடை கொண்டதாகும். இதன் மதிப்பு ஒரு லட்சமாகும். காவல் துறையில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கோயிலில் இருந்து மெயின் ரோடு மாவடி விநாயகர் கோயில் வரை சென்று சென்றது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில்,கோபுர கலசத்தில் உள்ள இரிடியத்தின் சக்தியை விவரிக்க மோசடியாளர்கள் செய்யும் ஹைடெக் சோதனைக்கு பெயர் தான் ரைஸ் புல்லிங். அதாவது சக்தி வாய்ந்த இரிடியத்தை கொண்ட கோபுர கலசம் என்றால், சுற்றிலும் அரிசியை போட்டால் இழுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்ததாக சொல்லப் படும். கலசத்தில் சக்தி வாய்ந்த இரிடியம் இருக்கா என சோதிக்கும் முறை தான் இது.
அரிசியை இழுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால் இது ரைஸ் புல்லிங் அதாவது அரிசியை இழுப்பது பெயர்பெற்றுள்ளது. ரைஸ் என்ற புல்லிங் என அழைக்கப் பட்டாலும் ,இந்த மோசடியின் மூலமாக இருப்பது இரிடியம்தான். இரிடியம் என்பது கெட்டியான, அடர்த்தி யான ஒரு உலோகம். மேலும் இடி விழுந்தாலும் இது தாங்கும் என்பதால் கோவில்களில் கடவுள் சிலையை பாதுகாக்க, பொக்கிஷங்களை பாதுகாக்க இரிடியம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பழமையான கோவில் கலசங்களில் இந்த இரிடியம் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரிடியம் இடி தாக்கப்பட்டால் அது சக்தி மிக்கதாய் மாறி விடும் என்றும், அதை வைத்திருப்பவர்களுக்கு தொட்ட தெல்லாம் வெற்றி தான் எனச் சொல்லி இரிடியத்தின் பெயரால் தான் இந்த மோசடி நடத்தப் படுகிறது. இக்கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான என்பதால், ரைஸ் புல்லீங் மோசடி பேர் வழிகள் திருடி சென்றிருப்பார்கள் என்றார்.