திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கல்கேணித்தெரு காதர் முகைதீன் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் அப்துல் ரஹ்மான் மகன் அகமது பைசல் (28) இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை அப்துல் ரஹ்மான் குடும்பத்தை விட்டு பிரிந்து திருப்பதியில் வசித்து வருவதால் அகமது பைசல் தனது தயார் ஹலீமா பானுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்த அகமது பைசல் காலை மீன் வெட்டும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை, பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் (பொறுப்பு)  சிவபிரகாசம், உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் கமதுபைசல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



 

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அகமது பைசல் எப்போதாவது மீன் வியாபாரத்திற்கு செல்வது அல்லது கூலி வேளைக்கு செல்வதுமாக இருந்தவர். வருமானம் இல்லாமல் குடும்ப கஸ்டத்தில் இருந்ததால் அவர் சமீபகாலமாக கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காலை நண்பர்களுடன் எப்போதும் போல பேசிவிட்டு வீட்டிற்கு சென்றவர் வீட்டில் இருந்த தனது தாயாரின் சேலையை எடுத்து தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது தயார் ஹலீமா பானு சேலையை பிடிங்கி தடுத்துள்ளார். பின்னர் அகமது பைசல் கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போறேன் என்று மிரட்டியதால் அதர்ச்சியடைந்த ஹலீமா பானு தனது அண்ணன் முகமது ஹசனை அழைத்து வர சென்றுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட அகமது பைசல் மீன் வெட்டும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மயங்கி விழுந்ததால் இரத்தம் வெளியேறி துடிதுடித்து இறந்து கிடந்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. 



 

மேலும் அகமது பைசல் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களிடம் காவல் துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் குறிப்பாக அகமது பைசல் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு காரணம் மன உளைச்சல் தானா அல்லது குடும்ப பிரச்சனையா அல்லது யாரிடமாவது கடன் வாங்கி இருந்து அவர்கள் அகமது பைசலை தொந்தரவு செய்தார்களா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து தங்களது விசாரணையை தீவிரமாக மேற்க்கொண்டு வருகின்றனர். மீனவ கூலித்தொழிலாளி தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.