தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே கருக்காடிப்பட்டி, கக்கரைகோட்டை, சோழபுரம், வடக்கூர், செல்லம்பட்டி என 18 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தது. தற்போது  கருக்காடிப்பட்டி கொள்முதல் நிலையம் மட்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  கருக்காடிப்பட்டியில் சுமார் 800 ஏக்கர்  நிலத்தில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்தனர். இந்நிலையில் சம்பா நெல் அறுவடை செய்து சுமார் 3 ஆயிரம் மூட்டை நெல்லை  கருக்காடிப்பட்டி கொள்முதல் நிலையம் கொண்டு வந்து 20 நாட்களுக்கும் மேலாக கொட்டி வைத்து விவசாயிகள் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.




அண்மையில்  பெய்த மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி, முளைத்து வருகிறது. மேலும், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்தால் தான் கொள்முதல் செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் சர்வர் குளறுபடியால் பதிவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி  காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் முத்து உத்திராபதி தலைமையில்   கருக்காடிப்பட்டியில் பேருந்துகளை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


நெல் கொள்முதல் செய்ய புதிய நடைமுறையான ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும், பழைய நடைமுறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை கொள்முதல் நிலையத்தில் காக்க வைக்க கூடாது. உடனடியாக 3 ஆயிரம்  நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்துக்கு ஒரத்தநாடு வட்டாட்சியர் சீமான் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்வதாக உறுதியளித்தனர். மேலும் ஆன்லைன் பதிவு என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர் சாகுபடி செய்வதற்காக போதுமான வசதிகள் இல்லாததால், கடன்களையும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்கின்றோம். கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால், அறுவடை செய்த நெல் மூட்டைகள் அனைத்து மழையில் நனைந்துள்ளதால், முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து நெல் மூட்டைகளும் விற்பனை  செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.