தஞ்சாவூர்: 26 ஆண்டுகள்... சுற்றி, சுற்றி வந்து இவர் பஞ்சர் சர்வீஸ் செய்த வண்டிகளின் எண்ணிக்கையை எண்ண ஆரம்பித்தால் நாட்கள் போதாது. யார் இவர். அவர்தான் மாயக்கிருஷ்ணன். 65 வயதிலும் அசராத உழைப்பு.
வயசு என்னவோ 62... உழைப்பில் உசைன் போல்ட்
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் மாயக்கிருஷ்ணன் இவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. வயது என்னவோ இவரை முதியவர் என்று அடையாளம் காட்டலாம். ஆனால் சுறுசுறுப்பில் இவர் உசைன் போல்ட்தான். அதற்காக ஓட்டப்பந்தய வீரரா என்று கேட்காதீங்க. இவர் தஞ்சையில் கடந்த 26 ஆண்டுகளாக மொபைல் பஞ்சர் சர்வீஸ் செய்து வருகிறார். அதுமட்டுமா? தஞ்சையில் முதன் முதலாக மொபைல் பஞ்சர் சர்வீஸை அறிமுகப்படுத்தியதும் இவர்தான் என்பதுதான் கூடுதல் விஷயம்.
25 ஆண்டுகளாக பஞ்சர் சர்வீஸ்
இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை கீழவாசல் பகுதியில் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார் மாயக்கிருஷ்ணன். இப்போ இருக்கிறது மாதிரி அப்போ செல்போன் பயன்பாடு என்பது பெரிய அளவில் கிடையாது. செல்போன் பெரிதளவில் பயன்பாட்டிற்கு வராத காலம் என்பதால் வாடிக்கையாளர்கள் இவரது கடைக்கு பக்கத்து கடை லேண்ட் லைன் மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளனர்.
அதன் பிறகு முதன்முதலில் ரிலையன்ஸ் மொபைல் வாங்கிய பிறகு சும்மா, சுற்றி சுற்றி வந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் மாயா அண்ணே... பைபாஸில் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு வாங்கண்ணே, என்று உரிமையுடன் அழைக்கும் அளவிற்கு பெரியளவில் தெரியவந்துள்ளார்.
மாயா அண்ணே எங்கே இருக்கீங்க
தற்போது தஞ்சையில் எங்கே உங்க வண்டி பஞ்சர் ஆனாலும், கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்தா அவர்தான் மாயக்கிருஷ்ணன். இவரை தெரியாத ஆளே இருக்க முடியாத வகையில் பஞ்சர் பிரபலமாக இருந்து மாறிவிட்டார். முக்கியமாக தஞ்சையில் உள்ள 80' கிட்ஸ் 90ஸ் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மழையாவது, வெயிலாவது: மாயா வந்து நிற்பார்
தஞ்சை நகரில் எந்த நேரத்தில் போன் செய்தாலும் போதும் மழை வெயில் என எதையும் பார்க்காமல் சட்டென்று உடனே வந்து பஞ்சர் ஒட்டி கொடுப்பார் என்று கூறுகின்றனர் இவரின் வாடிக்கையாளர்கள். இவரிடம் வாடிக்கையாளர்களாக இருந்த பலர் தற்போது இவருடைய நண்பர்களாகவே மாறிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுறுசுறுப்பின் மறுபெயர் மாயக்கிருஷ்ணன்
பஞ்சர் ஒட்டுவதற்காக ஆரம்பத்தில் ரூ.20 லிருந்து தற்போது 120 ரூபாய் வரை ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தார் போல் பெற்று வருகிறார். என்னதான் இன்று நிறைய இடங்களில் மொபைல் பஞ்சர், மெக்கானிக் ஷாப் எல்லாம் வந்தாலும் தஞ்சையில் முதன் முதலில் தான்தான் மொபைல் பஞ்சரை தொடங்கினேன் என்கிற சிறிய மகிழ்ச்சியோடு தொடர்ந்து தன்னுடைய 62 வயதிலும் பஞ்சர் சர்வீஸ் மாயாவாக சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார் மாயக்கிருஷ்ணன்.