தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் மேட்டூர் அணை திறப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா, கூட்டுறவு வங்கி இணை இயக்குனர் தமிழ் நங்கை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் அனைவரும் புதிய கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு சால்வை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். பின்னர் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளை புறக்கணித்ததை கண்டித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


பின்னர் விவசாயிகள் பேசியதாவது:


ஜீவக்குமார்: ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் தண்ணீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவிடம் இருந்து தமிழகப் பகிர்வை தொடர்ந்து தொய்வின்றி கேட்டுப்பெற வேண்டும். குறுவை பயிர்க்காப்பீடு செய்ய வருவாய்துறையில் சிட்டா அடங்கல் தடங்கலின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். விஏஓக்கள் இதுவரை முறையாக கொடுக்கவில்லை. கல்லணைக்கு முன்பு கட்டப்பட்ட கச்சமங்கலம் அணை ஆபத்தான நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் பூதலூர்,கள்ளப்பெரம்பூரில் உடன் கட்டித்தர வேண்டும்.




என்.வி.கண்ணன் : தண்ணீர் மிகை மிஞ்சினால் அதை சேமிக்க வேண்டும் நீரை சிக்கனப்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும். மரக்கால் வலசை பகுதியில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு கடல் நீரை பயன்படுத்தினர் .தற்போது ஆழ்குழாய் அமைத்து நன்னீரை எடுத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதனால் அப்பகுதியில் ஏழு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கே.எஸ்.முகமது இப்ராஹிம்: குறுவை சாகுபடிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் நலன் கருதியும் உடன் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தமிழக மக்களையும், தமிழக நலனையும் கெடுக்கும் விதமாக உள்ளது. மேலும் விவசாயிகளை இந்த பட்ஜெட் முழுவதும் புறக்கணித்து உள்ளது.


சிவவிடுதி சின்னதுரை: விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியும் அதை வரவு வைக்கவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது. திருவோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து முறைகேடு நடக்கிறது. இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் அதே தவறு நடக்கிறது. அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை வேறு பெயருக்கு முறைகேடாக போலி அடங்கல் கொடுக்கப்பட்டுள்ளது.


கூட்டுறவு இணைப்பதிவாளர்: விவசாயிகள் கட்டிய பணம் வரவு வைக்காதது குறித்து விசாரணை நடக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறப்பதற்கு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம் ஒரு போக சம்பா சாகுபடியில் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். இல்லாவிட்டால் பயிர்கள் நோய், பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகும். விவசாயிகள் வேலைக்கு செல்லும் போது விபத்தில் இறந்தால் ரூ.3 லட்சம், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.


வீரசேனன்: பட்டுக்கோட்டை வட்டத்தை இரண்டாக பிரிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆம்பலாப்பட்டு தங்கவேல்: மேட்டூர் அணை நிரம்பி வருவதால் ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுந்தர விமலநாதன்: ஆகஸ்ட் 5 வரை கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை பெற வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இங்கு மணல் குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது. இது ஆபத்தை ஏற்படுத்தும். திருஆரூரான் சர்க்கரை ஆலை மோசடி குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்.


யுவராஜ்: சாத்தனூர் சாலை சீரமைக்க வேண்டும். நாயக்கர் குளம் தனியார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை மீட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் தூர்வாரி ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.