தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தருமபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.



தமிழகத்தின் நெற்களஞ்சியமாக  தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர்.

குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது.

இதில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அறுவடைப்பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இதில் ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டு முன்னதாகவே அறுவடையை முடித்து நெல்லை விற்பனை செய்து விட்டனர்.





 
இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேரடி நெல் விதைப்பு, நாற்று நடுதல், இயந்திரம் வாயிலாக நடவுப்பணி என்று விவசாயிகள் சாகுபடி மேற்கொண்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த மழை, கடும் பனியால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டது. அவ்வாறு பாதித்த பகுதிகளில் மறு நாற்று நட்டு விவசாயிகள் சாகுபடியை மேற்கொண்டனர். இப்பகுதிகளில் பொங்கல் மற்றும் அடுத்த சில நாட்களில் அறுவடையை விவசாயிகள் முடித்து விடுவர். இம்முறை இயற்கை இடர்பாடு, காலதாமதம் போன்றவற்றால் தற்போதுதான் அறுவடை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு  லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

இந்தநிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரிலிருந்து தர்மபுரிக்கு  2000 டன் நெல் 42 வேகங்களில் சரக்கு ரயிலில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.