கிரெடிட் கார்ட்டில் பணம் கட்டாமல் உள்ளது என்று சிங்கப்பூர் போலீசில் இருந்து பேசுகிறோம் என வாட்ஸ் அப் கால் வாயிலாக பேசி தஞ்சையை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் பணத்தை எடுத்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை விளார் ரோடு, பத்மநாபன் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் முருகானந்தம் (45). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். தொடர்ந்து மே மாதம் மீண்டும் விசா கிடைத்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இவர் சிங்கப்பூருக்கு செல்ல முடியாத நிலை உருவானது. முருகானந்தம் தனது தேவைக்காக சிங்கப்பூரில் 2 கிரெடிட் கார்டுகள் உபயோகப்படுத்தி வந்துள்ளார்.




இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி, முருகானந்ததின், செல்போன் எண்ணிற்கு ஒரு வாட்ஸ் அப் கால் வந்துள்ளது. இதை எடுத்து பேசிய முருகானந்தத்திடம் எதிர்முனையில் பேசியவர்,  சிங்கப்பூர் போலீசில் இருந்து பேசுகிறோம். கிரெடிட் கார்ட்டில் பணம் கட்ட வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் வங்கியில் பணம் போடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதற்கு பணம் போடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூருக்கு செல்வதில் இடையூர் ஏற்படுமோ என்றும், சிங்கப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்தால், பிரச்சனை விபரீதமாகிவிடுமோ என்று பயந்து, வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்தார். வீட்டிலுள்ளவர்களும் உடனடியாக பணத்தை கேட்கும் தொகையை செலுத்தி விடுங்கள் என்றனர்.


இதனையடுத்து முருகானந்தம்,  ஒரத்தநாட்டிலுள்ள இந்தியன் வங்கியில் தனது மனைவியின் வங்கி கணக்கு விபரங்களையும், அதே வங்கியில்  தனது மனைவியின் உள்ள தனது ஜாயின்ட் கணக்கு விபரங்களையும் தெரிவித்துள்ளார். மேலும் ஓடிபி விபரத்தையும் கூறியுள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் காலில் பேசிய நபர் முதலில் முருகானந்தம் மனைவி வங்கி கணக்கில் இருந்து 1.98 லட்சத்தையும், இருவரின் ஜாயின்ட் கணக்கில் இருந்து 2 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்தை நெட் பேங்கிங் வாயிலாக எடுத்துள்ளார். இந்த பணத்தை கிரெடிட் கார்ட் கணக்கில் சேர்ப்பதற்காக என்று கூறியுள்ளார்.


ஆனால் பணம் எடுக்கப்பட்டதே தவிர முருகானந்தம் கிரெடிட் கார்டில் பணம் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து தன்னை அழைத்த வாட்ஸ் ஆப் காலுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப்பாகியிருந்தது. அதன் பிறகு பல முறை தொடர்பு கொண்ட போதும் ஸ்விட்ச் ஆப்பாகி இருந்ததால், முருகானந்தம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூரில் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. பணத்தை ஏமாந்தவர்களும் புகார் அளித்து வருகின்றார்கள். ஆனால் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்று புகார் அளித்தவர்கள் புலம்புகின்றனர்.