திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த 17 வயது ஆதரவற்ற சிறுவன் தனது படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக அம்மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டு மார்ச் 5 ஆம் தேதி தஞ்சாவூர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சேர்ந்து இரண்டு தினங்களே ஆன நிலையில், அவர் மார்ச் 7 ஆம் தேதி அங்கிருந்து யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அச்சிறுவனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அச்சிறுவன் சுமார் ஒரு மாதத்திற்கு முன் தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய போலீஸாரால் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்டு சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தான் ஏற்கெனவே தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து வந்ததாகவும், தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்புவதாகவும் அச்சிறுவன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, பள்ளியில் படிக்க வைக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு சிறார் நீதிக் குழும நீதிபதி உத்தரவிட்டார். அதுவரையில் அச்சிறுவனை மதுரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். அதன்படி, இதைத் தொடர்ந்து அச்சிறுவன் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மதுரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறார் நீதிக் குழும உத்தரவின்பேரில், தஞ்சாவூர் அரசினர் இல்லத்தைச் சேர்ந்த ஊழியர்கள் திருவேங்கடம், மதியழகன் ஆகிய இருவரும் மதுரைக்குச் சென்று அச்சிறுவனை பேருந்தில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். அம்மூவரும் இரவு 7 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது மோட்டார் சைக்கிளை சிறுவர்கள் இல்ல ஊழியர்கள் எடுத்துக் கொண்டிருந்த போது அச்சிறுவன் திடீரென மாயமானார்.
சிறுவனை காணாமல் போனதால், ஊழியர்கள் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்தனர். அச்சிறுவன் இல்லாததா், இரண்டு ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவ்விருவரும் தொடர்ந்து உடனடியாக புதிய பேருந்து நிலையம் வெளி பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேடியும் அச்சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அரசினர் குழந்தைகள் இல்ல ஊழியர் திருவேங்கடம் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயகிப்போன அச்சிறுவனைத் தேடி வருகின்றனர்.