ஜனவரி 26: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்த நிலையில், திருவாரூரில் திமுக சார்பில் நடந்த டிராக்டர் பேரணியில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் தடுப்பு வேலிகளை டிராக்டர்களில் முட்டி தூக்கி எறிந்து போராட்டம்
பிப்ரவரி 22- ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டித்து கொலை
முத்துப்பேட்டை அருகே ஆஆலங்காடு கோவிலூர் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தலை துண்டித்து படுகொலை செய்தனர். முன் விரோதம் காரணமாக நடந்த கொலையில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மார்ச் 25 - திருவாரூர் தியாகராஜர் தேரோட்டம்
உலகப்புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. 10 வயதிற்கு குறைவானவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இருந்தபோதிலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஏப்ரல் 26 - தேர்தல் பணியில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் திருவிக அரசு கலைக்கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த அற்புதம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மே 3 - திருவாரூரை மீண்டும் வசப்படுத்திய திமுக
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக திமுக வெற்றிபெற்று திருவாரூர் சட்டமன்ற தொகுதியை திமுக தனது கோட்டையாக தக்க வைத்தது. கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் அதிமுக சார்பில் பன்னீர்செல்வமும் போட்டியிட்டனர். இதில் பூண்டி கலைவாணன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மே 23- விவாகரத்து தராததால் மனைவியை கொன்ற கணவன்
திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று அமெரிக்கா சென்ற நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விஷ்ணு பிரகாஷ் பலமுறை விவாகரத்து கேட்டும் அதற்கு ஜெயபாரதி மறுத்த நிலையில் வெளிநாட்டில் இருந்த விஷ்ணு பிரகாஷ் தனது உறவினர் மூலம் கூலிப்படைகளை வைத்து மனைவியை கொலை செய்தார். இந்த வழக்கில் கணவர் மற்றும் அவருடைய உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 12- சரியான நேரத்தில் தொடங்கிய குறுவை சாகுபடி
கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின் சரியான நேரத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்றது.
ஜூலை 20 -சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 32 ஆண்டு சிறை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 24 - மூடப்பட்ட அரிசி ஆலை திறப்பு
ஏபிபி செய்தி எதிரொலியால் திருவாரூரில் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நவீன அரிசி ஆலையை மீண்டும் திறக்கப்பட்டது. ஆலை மூடப்பட்டதால் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இது குறித்த செய்தி ஏபிபி நாடுவில் செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து திறப்பதற்கான நடவடிக்கை எடுத்தனர்.
செப்டம்பர் 20 - 24 மணி நேரத்தில் 20,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
அக்டோபர் 21 - துணி எடுத்தால் ஆடுகள் பரிசு
தீபாவளி பண்டிகைக்கு ஆடைகள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஆடுகள் வழங்கப்படும் என சாரதாஸ் துணிக்கடை நிறுவனம் அறிவித்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அக்டோபர் 24 - திமிங்கல எச்சில் கடத்திய 5 நபர் கைது
முத்துப்பேட்டை அருகே உப்பூர் கிராமத்தில் 5 கோடி மதிப்பிலான திமிங்கிலத்தின் உமிழ்நீரை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த நிஜாமுதீன், ஜாகிர் உசேன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நவம்பர் 6 - நிலம் இல்லாதவர்களுக்கு பயிர்க்கடன் - கூட்டுறவு சங்கத் தலைவர் பதவி நீக்கம்
தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய நிலம் இல்லாத நபர்களுக்கு பல லட்சம் மதிப்பில் பயிர்க்கடன் வழங்கிய புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் ரவி பணிநீக்கம்
நவம்பர் 13 - கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் முழுவதும் பெய்த கனமழையால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
நவம்பர் 15 - இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் கொலை
நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வனை ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் தலையை துண்டித்து படுகொலை செய்தது. இந்த சம்பவம் நடைபெற்ற 2 நாட்களில் அடியக்கமங்கலம் என்ற குமரேசன் என்பவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
டிசம்பர் 10 - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 23 லட்சம் பறிமுதல்
வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவேண்டிய விதைநெல்லை தனியார் நபர்களிடம் விற்பனை செய்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 23 லட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபாய் பணம் சிக்கிய நிலையில்வேளாண்மை உதவி இயக்குனர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு