தஞ்சாவூர்: தஞ்சையை சேர்ந்த தனியார் ஐ.டி., நிறுவன இன்ஜினியரிடம் மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று வீடியோ காலில் வந்து நூதன முறையில் ரூ.10.11 லட்சத்தை மோசடி செய்தவர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ஒர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் பணியாற்றும் இவருக்கு கடந்த 21ம் தேதி மும்பையிலிருந்த ஒரு போன் கால் வந்துள்ளது.


அதில் பேசியவர்கள் நாங்கள் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம். நீங்கள் வெளிநாட்டிற்கு ஒரு பார்சல் அனுப்பி உள்ளீர்கள். அதில் போதைப்பொருட்கள், ரத்து செய்யப்பட்ட சிம்கார்டுகள் உட்பட பல பொருட்கள் உள்ளன. உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த ஐடி நிறுவன இன்ஜினியர் தான் எந்த வெளிநாட்டிற்கும் பார்சல் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.




இருப்பினும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவரை மிரட்டும் வகையில் பேசியுள்ளனர். மேலும் மேலும் அவர்கள் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர். தொடர்ந்து வீடியோ காலில் அந்த நபர்கள் தஞ்சை  ஐ.டி. இன்ஜினியரை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னணியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் போன்று அமைத்துள்ளனர். இதனால் வெகுவாக பயந்து போய் உள்ளார் அந்த ஐ.டி இன்ஜினியர். தொடர்ந்து அவரிடம் வீடியோ காலில் பேசியவர்கள் தனி அறையில் இருந்துதான் பேச வேண்டும். வேறு யாரிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யக்கூடாது. நீங்கள் பார்சல் அனுப்பவில்லை என்றால் ஆன்லைனில் புகார் செய்து கொள்ளுங்கள்.


ஆனால் அதற்கு பணம் கட்ட வேண்டும். நீங்கள் பணம் கட்டிய பின்னர் நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது தவறு இல்லை என்றால் பணத்தை திரும்ப அனுப்பி விடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கூறிய வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக ரூ.10.11 லட்சத்தை அந்த ஐ.டி. இன்ஜினியர் அனுப்பி உள்ளார். மறுநாளும் அவர்கள் வீடியோகாலில் வந்த போது ஐ.டி.இன்ஜினியர் உங்கள் மீது சந்தேகமாக உள்ளது என்று தெரிவிக்கவே அவர்கள் இணைப்பை துண்டித்துள்ளனர். மீண்டும், மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை ஐ.டி. இன்ஜினியர் உணர்ந்துள்ளார்.


உடன் அவர் தஞ்சை சைபர் க்ரைம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி சைபர் க்ரைம் ஏடிஎஸ்பி முத்தமிழ் செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆலோசனைபடி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். நூதன முறையில் இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் வேலைவாய்ப்பு, டாஸ்க் முடித்தால் கூடுதல் லாபம், முதலீட்டுக்கு இருமடங்கு பணம் கிடைக்கும், வங்கி கணக்கு முடக்கம், பார்சல் வந்துள்ளது என்று கூறி அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. எனவே இதுபோன்று வரும் அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். எனவே இளைஞர்கள், பெண்கள் யாரும் இதுபோன்று வரும் அழைப்புகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தனர்.