கொரோனா தொற்று பரவிவரும் சூழ்நிலையில் காவலர்களை பணி செய்ய விடாமல் இளம்பெண் ஒருவர் நானும் ரவுடிதான் என்னால் மாஸ்க் அணியமுடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள் என காவலர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதால் அந்தந்த ஆட்சியர்கள் தலைமையில் சமூக இடைவெளி பின்பற்றவும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவலர்கள் மாஸ்க் அணியாமல் வருபவர்களை மாஸ்க் அணிந்து செல்லுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். அந்த நேரத்தில் இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்த போது காவலர்கள் அவரை மாஸ்க் அணிந்து செல்லும்படி கூறியுள்ளனர். அதற்கு அந்தப்பெண் மாஸ்க் என்னால் அணியமுடியாது எனவும் இந்த சிறிய மாஸ்க்கிற்கு 200 ரூபாய் அபராதம் அதிகம் எனவும் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது காவலர் இது ஆட்சியர் உத்தரவு எனவும் கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் செல்லவேண்டும் எனவும் மீண்டும் அறிவுறுத்தினார். 




அதற்கு அந்த பெண் ஆட்சியரை அழைத்து வாருங்கள் எனவும், கொச்சை வார்த்தைகளால் காவலரை திட்டித்தீர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக ”நானும் ரவுடிதான் உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள்” என ஆக்ரோஷமாக பேசும் வார்த்தைகள் பதிவாகி உள்ளது. மேலும் வீடியோ எடுத்தால் எடுத்துக்கொள் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் பகிரங்கமாக மிரட்டும் இந்த இளம்பெண் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மக்களின் நலன்கருதி அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை வென்று மீண்டு வரமுடியும் என்பதை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.