Ex-Minister Vijayabaskar: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்க சொத்துக்களை ஏன் முடக்கினோம் என வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் சொத்துக்களை விற்காமல் இருக்கவே முடக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. குறிப்பாக வரி பாக்கியில் 20 சதவீதம் மட்டும் செலுத்துமாறு கடிதம் அனுப்பியும் கட்டாததால்தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வரிபாக்கிய வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தை முடக்கியும், வங்கிக் கணக்கினை முடக்கியும் வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
கடந்த 2017 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் அணியினர் ஒரு பிரிவாகவும், ஓபிஎஸ் தலைமையிலான பிரிவினர் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவிருந்த ரொக்கப் பணம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், இந்த வங்கி கணக்குகளில் தான் எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளை பெறுவதாகவும், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள வருமான வரித்துறை, வரி செலுத்துவதை தாமதப்படுத்தவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு அமைப்புகளில் வழக்கு தொடர்ந்து இழுத்தடிப்பதாகவும் எனவே அவரது கோரிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க,
வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தாக்கல்..