விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேதப்படுத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ளது வீரங்கிபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, இந்தப் பள்ளியில், அதேப் பகுதியை சேர்ந்த 5  இளைஞர்கள் சேர்ந்து, மது போதையில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் வகுப்பறை கதவுகளை சேதப்படுத்தி உள்ளனர்.  மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள், அங்கிருந்த கட்டுக்கல்லை தூக்கி, வகுப்பறை கதவுகளை போட்டு உடைத்து, கட்டடங்களையும் சேதப்படுத்தி சேதப்படுத்தி உள்ளனர்.


 






அப்போது, எத்தனை முறை கல்லைத் தூக்கி போட்டாலும் கதவு உடையவும் இல்லை, திறக்கவும் இல்லை என்று அவர்கள் புலம்பி உள்ளனர். அப்போது, இந்தச் சம்பவம் குறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று அக்கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி, பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளது. இதன் காரணமாக, பள்ளியில் அத்துமீறிய அந்த இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை ஏற்பட்டது.


இந்த நிலையில், ஒரு மாதம் கழித்து, தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மதுபோதை ஆசாமிகள் யார் என்பது குறித்து கல்வித்துறையும், காவல்துறையும் இணைந்து, இனியாவது தக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது, அப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.