மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வந்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் அக்.23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை:
அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலிதா இறந்தது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் என்று அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஜெயலலிதா மரணமானது, ஒரு நாளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும், இதையடுத்து, நான்கு பேர் மீதும் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைக்கிறது என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லத் தயார் என்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?. டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வது பற்றி விளக்கிய பின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை? என ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியிருந்தது.
விஜயபாஸ்கர்:
இதையடுத்து, இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது, ஜெயலலிதா எங்களுக்கு கடவுள், ஆணையத்தில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் உண்மைக்கு புறம்பானது, ஒருதலைபட்சமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
எங்களை பொறுத்தவரையில், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இழந்த துக்கத்தில் உள்ள இந்த நேரத்தில், ஆணைய அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என தெரிவித்தார்.
பொது வாழ்க்கையில் இருக்க கூடிய இருக்க நாங்கள், இதை சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும் நேர்மையோடும், முறையாக நெஞ்சத்தில் தூய்மையோடும் எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.