தஞ்சாவூர்: வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என்று தஞ்சையில் விருதுநகர் தொகுதி எம்பி., மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய நாட்டில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு விதமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பாஜக அரசுக்கு ஒரு முற்றுப்புள்ளி அமைக்கும் விதமாக உள்ளன.

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை தயார் செய்வது குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள அந்தந்த கட்சி முடிவு செய்யும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி அறிவிப்போம். இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வந்தால் மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்தார்.

ஆகையால், இந்தியா கூட்டணி எப்போது முடிவு செய்கிறதோ அது சரியான நேரத்தில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும். மக்களுக்கு என்ன பிரச்சனை நடந்தாலும் அந்த இடத்திற்கு மோடி செல்வதும் கிடையாது. அதை பற்றி கவலைப்படுவதும் கிடையாது. ராகுல் காந்தியை பொறுத்தவரை மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த இடத்திற்கு ஓடோடி வருபவர். அவர்களின் பிரச்சனைகள், துன்பங்கள், துயரங்களில் பங்கு கொள்பவர்.
 
மோடி  மணிப்பூருக்கு செல்வார் என்று எதிர்பார்ப்பது நமக்கு ஏமாற்றமே. சந்திராயன் 3 வெற்றி என்பது இஸ்ரோ வெற்றி. அறிவியல் சார்ந்த வெற்றி. விஞ்ஞானிகளின் வெற்றி. இந்த வெற்றியை கொண்டாட வேண்டியது ஒவ்வொரு இந்தியர்களின் கடமை. இந்த வெற்றியை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே விஞ்ஞானிகள் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த பெயரை தான் மோடி வைத்திருக்க வேண்டும்.

ராகுல் காந்தி சென்றது பாதயாத்திரை. மழை, வெயில் குளிரென்று பாராமல் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், ஒவ்வொரு இந்தியர்களும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும், வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அன்பான அரசியலை மக்கள் மத்தியில் பரப்பவும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நான்கு நாட்கள் மட்டுமே யாத்திரையை மேற்கொண்டு விட்டு தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. பாதயாத்திரை என்ற பெயரை கேவலப்படுத்தியது அண்ணாமலையே சாரும். கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீருக்கு எப்போதுமே தடையாக இருந்தது இல்லை. காவிரி மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறதோ அதை காங்கிரஸ் கட்சி செய்யும். அதனை தடைப்படுத்துவது பாஜக அரசு தான். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளரும், தஞ்சை மாநகராட்சி 43 வது வார்டு கவுன்சிலருமான ஹைஜா கனி மற்றும் பலர் உடனிருந்தனர்.