2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர்.


முதல் முறையாக ஜூன் மாதம் 23-ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18- ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது முறையாக நேற்றும் இன்றும் மும்பையில் இந்தியக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தைவிட, ‘இந்தியா’ என்ற பெயரே பாரதீய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.


எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள்; ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து - அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.


பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை மத்தியில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் – பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும்.


ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சாதிகார  ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.


இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசியுள்ளார்.