திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கர்த்தநாத புரத்தைத் சேர்ந்த ரோஸ்லின் என்பவரின் மாமியார் ஞானாம்பாள். இவர் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும் மேலும் ரோஸ்லினுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளார். இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றதலைவி. அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னார்குடி ஒன்றிய பெருந் தலைவர் மனோகரன் உள்ளிட்ட 9 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ரோஸ்லின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மானோகரன் வீட்டில் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டில் சி பி சி ஐ டி விசாரணை நடைபெற்று வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.