விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் வெளுத்து வாங்கும் மழை காரணமாக நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கடலோர பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. விழுப்புரம் நகரில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு, மழை பெய்தது. இடையிடையே கனமழையாகவும் பெய்தது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. நகரில் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
கடல் சீற்றம் :
மழையின் காரணமாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். தொடர் மழையின் காரணமாக பேருந்து நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. செஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் செஞ்சி வாரச்சந்தையில் குறைந்த அளவிலேயே விவசாயிகள் கடைகள் அமைத்து இருந்ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கடை வீதியிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதேபோல் விக்கிரவாண்டி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழையும் பெய்தது.
மரக்காணம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கனமழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகள் :-
1.மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சலையானது காணிமேடு ஓடையில் ஏற்பட்ட வெல்ல பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
2.வளத்தி அருகே சிறுவாடி ஆறு தரைப்பாலம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
3.விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் கிராமத்தில் தரைப்பாலம் வேலை நடைபெறுவதால் தற்காலிகமாக போடப்பட்ட மண் சாலையில் மேல் தண்ணீர் செல்வதால் இரண்டு புறமும் தடை ஏற்படுத்தப்பட்டு காவலர் பணியில் உள்ளனர்.
4.கண்டமங்கலம் அருகே குயிலாபாளையம் பம்பை ஆற்று தரைப்பாலம் தடுப்பு கட்டைகள் மூலம் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
5.வளவனூர் அருகே மேட்டுப்பாளைம் தரைப்பாலத்தில் தடுப்பு கட்டைகள் மூலம் போக்குவரத்து தடை செய்பட்டு காவலர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
6.விழுப்புரம் அருகே பில்லூர் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு காவலர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.