தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாகை, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி போன்ற பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
கடும் அவதி :
டெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தேனியில் உள்ள வைகை அணையில் விநாடிக்கு 4,230 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை :
சென்னை போன்ற பெருநகர பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. இன்று அதிகாலையிலும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. ஆனாலும், மாநகராட்சியின் சீரான நடவடிக்கை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், வடசென்னை பகுதிகளில் ஆங்காங்கே முழங்கால் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், உடனடியாக நீரை அகற்றுவதோடு அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படிப்படியாக மழை குறையும் :
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையும் குறையும் எனவும் கணித்துள்ளது. அதைதொடர்ந்து வரும் 16ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக 17ம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகடலோரம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செங்கல்பட்டு, வாலாஜாபாத்,நெமிலி,சோளிங்கர்,உத்திரமேரூர்,வண்டலூர் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்யூர், காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் அதிகபட்சமாக திருத்தணியில் 13 செ.மீ., குப்பநத்தம் பகுதியில் 12 செ.மீ., கொடிமுடி பகுதியில் 11.7 செ.மீ., மதுராந்தகத்தில் 11 செ.மீ. மற்றும் திண்டிவனத்தில் 10 செ.மீ. அளவிற்கும் மழை பதிவாகியுள்ளது.