முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசியலுக்கு வந்த வீரபாண்டி ராஜா!
சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். சேலம் மாவட்ட திமுகவின் முக்கிய புள்ளியாகவும், சேலத்தில் திமுகவின் அடித்தளமாகவும் இருந்தவர். சேலத்து சிங்கம் என்றும், வீரபாண்டியார் என்றும் திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் வீரபாண்டி ஆறுமுகம். முன்னாள் முதல்வர் கருணாநிதியே அதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக இருந்த அவரது மூத்த மகன் செழியன் திடீரென இறந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகனான வீரபாண்டி ராஜா களமிறங்கினார்.
ஓரம் கட்டப்பட்ட ராஜா!
தனக்கு எம்எல்ஏ ஆகும் ஆசை இருப்பதாகவும், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு வீரபாண்டி ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்திடம் நச்சரிக்க, அவரும் அந்த விவகாரத்தை அன்றைய திமுக தலைவர் கருணாநிதியிடம் கொண்டு சென்றார். ‛சரி பார்க்கலாம்...’ என அப்போது கருணாநிதி கூறியதாகவும், ‛அப்போ.. ஸ்டாலினுக்கு சீட் கொடுக்க மாட்டீங்களா... தலைவரே...’ என வீரபாண்டி ஆறுமுகம் பேசி, தன் மகனுக்கு சீட் வாங்கி வந்ததாக பரவலான பேச்சு உண்டு. வீரபாண்டி ஆறுமுகம் இருந்த வரை ஸ்டாலினுடன் அவர் ஒத்துப்போகவில்லை. அதுவே அவரது மறைவுக்கு பின் அவரது மகன் வீரபாண்டி ராஜா ஓரங்கட்டப்படவும், ஒதுக்கி வைக்கப்படவும் காரணமானது.
வாய்ப்பு மறுப்பு!
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின், சேலம் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு ஸ்டாலின் ஆதரவு கிடைத்ததால், ராஜா-ராஜேந்திரன் உரசல் உச்சம் பெற்றது. இதனால் தொடர் தோல்விகளை சேலம் மாவட்டத்தில் திமுக சந்தித்தது. இதனால் வீரபாண்டி ராஜா மீது ஸ்டாலின் உச்சகட்ட அதிருப்தியில் இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டு, தேர்தல் பணிக்குழுத் தலைவராக பணியாற்றி வந்தார்.
பிறந்தநாளில் இறந்த சோகம்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். அவர் பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் பரவலாக தகவல் பரவியது. ஆனாலும் அவர் திமுகவில் தொடர்ந்தார். இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது வீட்டில் தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மாடி ஏறிய போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே அங்குள்ள சரவணா என்கிற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். சேலத்தில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு அவர் காலை 10 மணியளவில் மரியாதை செலுத்த செல்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...
Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?
‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!
அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!