தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்து தஞ்சை அரசு போக்குவரத்து நகர கிளை தொழிலாளர்கள் இரண்டு மணி நேரஉள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால், பஸ்சுகள் தாமதமாக புறப்பட்டது.


‛‛அவன் வீட்டு சொத்து போல பெண்களை மரியாதையின்றி நடத்துகின்றனர்... அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும். பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அப்படி செய்யும் நடத்துனர்களை வேலையை விட்டு அகற்றி வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்...’ இது தான் அமைச்சர் துரைமுருகன் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு. அரசு பேருந்து ஊழியர்களை அவர் அவமதித்து பேசியதை கண்டித்து, தற்போது துரைமுருகனுக்கு எதிராக அவர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளனர். 




இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் தரப்பில் கூறப்படுவது...


‛மகளிருக்கு இலவச பயணம் என்கிற திட்டம் மகத்தானது , என்பதை மறுக்க முடியாது , இதற்காக அரசு ரூ. 1200  கோடி ஒதுக்கியுள்ளது போதுமானதல்ல .  எதிர்பார்த்ததைவிட கூடுதலாக மகளிர் பயணம் செய்கிறார்கள் என அமைச்சரே கூறியுள்ளார் . மகளிர் இலவச பயணத்திற்கான வருவாய்க்கான பேட்டா ஓட்டுனர் , நடத்துனர்களுக்கு வழங்கப்படவேண்டும்.


 போக்குவரத்து துறை அமைச்சரிடம் இதுகுறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது . தமிழகஅரசின் இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுபவர்கள் ஓட்டுனர் , நடத்துனர்கள் தான் . அரசியல் மாற்றத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்களின் பங்களிப்பு முழுமையாக இருந்தது என்பதையும் மறந்துவிடக்கூடாது .


தமிழகத்திலுள்ள யாரோ ஒரு தொழிலாளர் ஒருவர்  தவறாக பேசியிருக்கலாம். அதற்காக பொதுவெளியில், அவன் வீட்டு சொத்து போல பெண்களை மரியாதையின்றி நடத்துகின்றனர் என்றும் , அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும் என்றும் ,பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அப்படி செய்யும் நடத்துனர்களை வேலையை விட்டு அகற்றி வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என கண்ணியம் இன்றி, மிகவும் மோசமாகவும், போக்குவரத்து தொழிலாளர்களை மிகவும் கீழ்தரமாக, நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.


கொரானா ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியின்றி உயிரை பணயம் வைத்து பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான நடத்துனர்களிடம் அமைச்சரின் இந்த பேச்சு மனதளவில் பாதித்துள்ளது,’ என்றனர். 




அமைச்சரின் துரைமுருகனின் பேச்சை கண்டித்து  தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை தொழிலாளர்கள் திடீரென  இரண்டு மணி நேரம் பணிமனையிலிருந்து பேருந்துகளை வெளியே எடுக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.பின்னர் கோட்ட மேலாளர், கிளைமேலாளர்கள் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்துகளை இயக்க செய்தனர். பிறகு வழக்கம் போல் பேருந்துகள் தடத்தில் இயக்கப்பட்டது.


 இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், ‛கொரோனா காலத்தில், பயணிகள் சிரமப்படக்கூடாது என, எங்களை பற்றியும், குடும்பத்தை பற்றியும் கவலைப்படாமல் பஸ்களை இயக்கி வருகின்றோம். ஆனால் அமைச்சர் இது போன்று மிகவும் மோசமாகவும் இழிவாக பேசியது கண்டனத்திற்குரியது. மிகவும் பழுந்தடைந்த பஸ்சுகளை கொண்டு கிராமப்புற பகுதியில் நேரத்திற்கு தவறாமல் சென்று வருகின்றோம். அப்போது நேரமின்மை காரணமாக சில தவறுகள் நடந்திருக்கலாம். இதற்காக ஒட்டு மொத்த தொழிலாளர்களை பேசியிருப்பது வேதனையான செயலாகும். தவறாக பேசிய போக்குவரத்து தொழிலாளர்களை முறத்தால் அடியுங்கள் என்று அமைச்சர் பேசியுள்ளார். இதே போல் தவறும் செய்யும் ஆட்சியாளர்களை எதை கொண்டு அடிப்பது. அமைச்சர் பேசிய பேச்சை திரும்ப பெற்று கொள்ள வேண்டும், போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுகொண்டதற்கிணங்க பஸ்சுகளை இயக்கினோம்,’ என்றனர்.