இந்தியில் "தி ஃபேமிலி மேன் 2” என்ற தொடர் உருவாக்கப்பட்டு, அந்த தொடர் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி, இந்த தொடருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்த தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.




இந்த கடிதத்தில், “தி பேமிலி மேன் 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கிறேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. தமிழர்களை பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்பு ஏஜெண்டுகளுடன் தொடர்பு உள்ளவர்களைப் போலவும் சித்தரித்து இருக்கிறார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை நீத்த ஈழப்போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக அந்த தொடரில் காட்சிகள் இருக்கின்றன.




இத்தகைய காட்சிகளை கொண்ட இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. எனவே, இந்த தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால், தி பேமிலி மேன் 2 என்ற தொடர் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என எழுதியுள்ளார்.


ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்கியுள்ள இந்த பேமிலி மேன் 2 என்ற இந்தித் தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ளார். மேலும், தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவும், பிரியாமணியும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜீ என்ற ராஜலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவின் கதாபாத்திரமே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், சமந்தா அணிந்து வரும் உடை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆடைகள் போலவே இருப்பதால், எல்.டி.டி.இ. இயக்கத்தை கொச்சைப்படுத்துவதுபோல இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளதாக தமிழ் அமைப்புகளும், பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த சீரீஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த தொடரை தடைசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.