இந்தியாவில் கனவு வேலை ஒன்று இருக்கிறது என்றால் அது ஐஏஎஸ் வேலைதான். வேலையல்ல.. அது தவம். ஒரு சிலர் இதற்காக தங்களுடைய இளமைக்காலத்தின் சில ஆண்டுகள் வரை செலவு செய்து முயற்சி செய்வார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைவார்கள். மற்றவர்கள் ஆறு முறை முயற்சி செய்தும் தோல்வி அடைவார்கள். ஆனால் அதற்காக அவர்கள் செலவிடும் நேரம் என்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் இந்தப் பயணம் எப்போதும் அவர்களை ஒரு நல்ல சுயபரிசோதனை செய்து கொள்ளும் வகையில் அமையும். 


இதற்காகவே பலரும் இந்த தேர்வை எழுத வேண்டும் என்று ஆசையுடன் இருப்பார்கள். அப்படி இந்தத் தேர்வை எதிர்கொள்ள ஆசையுடன் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே பணியில் இருக்கும் அதிகாரிகள் சிலர் ரோல் மாடலாக இருப்பார்கள். இந்த பணியில் இருக்கும் ஒரு சிலரில் பலர் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். உதாரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் அலெக்ஸ் பால் மேனன் ஐஏஎஸ், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் மணிவண்ணன்  ஐஏஎஸ் ஆகியோர் பலருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். 




தற்போது அந்த வரிசையில் மீண்டும் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிறுமி ஒருவரின் ஐ.ஏ.எஸ் கனவுக்கு விதை போட்டது மட்டுமல்லாமல் அதற்கு நன்றாக ஊக்கத்தையும் அளித்துள்ளார். யார் அவர்?


உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வகுமாரி ஜெயராஜன் இருந்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒரு சிறிய குழந்தை ஒருவர் வந்துள்ளார். அவர் ஐஏஎஸ் அதிகாரியிடம், “நான் ஒருநாள் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நாற்காலியில் அமரும் போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்?” எனக் கேட்டுள்ளார். 






அதற்கு அடுத்த நொடியே அக்குழந்தையை செல்வகுமாரி ஐஏஎஸ் தன்னுடைய நாற்காலியில் அமர வைத்துள்ளார். அதற்கு அக்குழந்தை, “இந்த நாற்காலியில் அமர்வது மிகவும் நன்றாக இருந்தது” எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அக்குழந்தைக்கு செல்வகுமாரி ஐஏஎஸ்,”இந்த நாற்காலியிலிருந்து நீங்கள் நிறையே விஷயங்களை செய்ய முடியும். ஆகவே உங்களுடைய முயற்சியை எப்போதும் கைவீடாதீர்கள்” என்ற அறிவுரையையும் வழங்கியுள்ளார். 


“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும்”


என்ற வள்ளுவரின் வரிகளை போல் அந்த சிறுமிக்கு முயற்சியை கைவிட வேண்டாம் என்று கூறி ஊக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வகுமாரி (பி ஆர்க்)கட்டிடவடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். 2006ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னுடைய மூன்றாவது முயற்சியில் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் உத்தரப்பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்தியாவில், இன்னும் 6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் - SII சி.இ.ஓ